கரும்பு ஆதார விலை ரூ.1,550 – விவசாயிகள் கோரிக்கை!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (14:02 IST)
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்பு டன் ஆதார விலையாக ரூ.1,550 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் கோரியுள்ளது.

கரும்புக்கான ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. சென்ற வருடம் மத்திய அரசு 1 டன் கரும்பு விலை ரூ.802.50 என நிர்ணயித்தது.

இதற்கான கூடுதல் விலையை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம். இதன் படி தமிழக அரசு 1 டன் ஆதார விலை ரூ.1.025 என நிர்ணயித்தது.

முன்பு கரும்பில் சர்க்கரை கட்டுமானம் 8.5 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது சென்ற வருடம் 9 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் விவசாய பிரிவான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் 1 டன் கரும்புக்கு ரூ.1,550 என நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இதன் பொதுச் செயலாளர் நல்லசாமி கூறுகையில், கரும்பு விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வுகான அரசு அதிகாரிகள், சர்க்கரை ஆலை முதலாளிகள், கரும்பு விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்.

பர்கவா குழுவின் பரிந்துரை படி, சர்க்கரை ஆலைகளின் இலாபத்தில் 75 விழுக்காடு கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். கரும்பு சக்கையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மொலாசஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மற்ற பொருட்களில் இருந்து கிடைக்கும் இலாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்