பணவீக்கம் 13% ஆக அதிகரிக்கும் - ரெங்கராஜன்!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (14:37 IST)
ரூபாயின் பணவீக்கம் 13 விழுக்காடாக அதிகரிக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் சி. ரெங்காரஜன் கூறியுள்ளார்.

இன்று இந்த நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கையை ரெங்கராஜன் வெளியிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உணவுப் பண்டங்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை தற்போது குறையும் வாய்ப்பு இல்லை. இதனால் பணவீக்கம் 13% ஆக அதிகரிக்கும். இது டிசம்பர் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக குறைந்து, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் 8-9% என்ற அளவு இருக்கும்.

கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவு பணவீக்கம் 12% ஆக அதிகரித்தது. இதைக் குறைக்க ரிசர்வ் வங்கி ஜுலை மாதம் இறுதியில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதம், வங்கிகளின் இருப்பு விகிதத்தை அதிகரித்தது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை ஆதரித்து ரெங்கராஜன் கூறுகையில், இந்த பொருளாதார கட்டுப்பாடு, நடவடிக்கைகளை ஒருங்கினைந்து மேற்கொண்டால் 2009 மார்ச் மாதத்திற்குள் பணவீக்கத்தை 8-9 என்ற அளவிற்கு குறைக்க முடியும். பணவீக்கத்தை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

உலக அளவில் தற்போது நிலவும் சூழ்நிலையில் விவசாயம், தொழில் துறை, சேவை துறைகளின் வளர்ச்சி குறையும். இது இந்தியாவையும் பாதிக்கும்.

இந்தியாவில் சென்ற வருடம் விவசாய துறை வளர்ச்சி 4.5% ஆக இருந்தது. இது இந்த வருடம் 2 விழுக்காடாக குறையும் வாய்ப்பு உள்ளது. இதே போல் தொழில் துறை வளர்ச்சி 7.5% (சென்ற வருடம் 8.5%), சேவை துறை வளர்ச்சி 9.6 (சென்ற வருடம் 10.8%) ஆக இருக்கும் என்று ரெங்கராஜன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்