பிளமிங்கோ லில்லி என்று அழைக்கப்படும் ஆந்திரியம் அலங்கார மலரை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்று பி.கே.சிங் தெரிவித்தார்.
காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆந்திரியம் வளர்க்க ஏற்ற பருவநிலை உள்ளது. இது கர்நாடாக மாநிலத்தில் குடகு பகுதியில் அதிக அளவு வளர்க்கப்படுகின்றன. இதை அயல்நாடுகளில் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பு உள்ளதால், மத்திய அரசு விவசாயிகளுக்கு பிளமிங்கோ லில்லி அழகு மலரை வளர்க்க மானியம் வழங்குகிறது.
மத்திய ஆந்திரியம் வாரிய இயக்குநர் பி.கே சிங் சென்ற வாரம் கர்நாடகா மாநிலத்தில் குடகு பகுதியில் ஆந்திரியம் வளர்க்கும் சில தோட்டங்களை பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய விவசாய அமைச்சகம் அழகு மலரை வளர்ப்பதை ஊக்குவிக்கிறது. இந்த மலர் ஏற்றுமதியால் அதிக அளவு அந்நியச் செலவாணி கிடைப்பதால், அழகு மலரை வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியமும் வழங்குகிறது. சென்ற வருடம் கர்நாடகா மாநிலத்தில் ஆந்திரியம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ரூ.13.5 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்தில் அதிக அளவு ஆந்திரியம் வளர்க்கப்படுகிறது.
இதை இணையம் மூலம் விற்பனை செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்று சிங் தெரிவித்தார்.