நேரடி வரி வசூல் 47% அதிகரிப்பு!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (21:19 IST)
மத்திய அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் நேரடி வரி வருவாய் ரூ.71 ஆயிரத்து 648 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டு ஏப்ரல்- ஜூலையுடன் ஒப்பிடுகையில் 46.95% அதிகம்.

பெரிய நிறுவனங்கள் கட்டும் வரி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதே போல் தனிநபர் கட்டும் வரி 43%, முன் பிடித்தம் செய்து கட்டிய வருமான வரி (டி.டி.எஸ், டி.சி.எஸ்) 60 % அதிகரித்துள்ளது.

நேரடி வரி வருவாய் உயர்வு அதிகரித்து இருப்பது பற்றி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரி உயர்வாய் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் வருமான வரிதுறை பொதுமக்கள் மத்தியல் வரி கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதுடன், ஊதியம் வழங்கும் போதே வரி பிடித்தம் செய்யப்பட்டதும் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்கள் ஊதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்து கட்டியது 60.6% அதிகரித்துள்ளது. தொழில் துறையின் உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் உற்பத்தி வரி மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறையும்.

இந்த சூழ்நிலையில் வருவான வரி வருவாய் அதிகரித்து இருப்பது, ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரையால் மத்திய அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவை சரிகட்ட உதவியாக இருக்கும்.

மத்திய நிதி அமைச்சகம் இந்த நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் மூலம் ரூ.3,65,000 கோடி கிடைக்கும் என்று முதலில் மதிப்பிட்டு இருந்தது.

இதை மறு மதிப்பீட்டில் ரூ.4 லட்சம் கோடியாக உயர்த்தியது.

இந்த நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நிறுவன வரி வருவாய் 50.08% அதிகரித்துள்ளது. நிறுவன வரி மூலம் ரூ.41,598 கோடி வசூலாகி உள்ளது. (சென்ற ஆண்டு ரூ.27,718)

இதே போல் தனி நபர் வருமான வரி, உபரி சலுகை வரி, பங்கு பரிவர்த்தனை வரி, வங்கியில் ரொக்கமாக பணம் எடுக்கும் போது விதிக்கப்படும் வரி ஆகியவைகளில் வசூல் 42,82% அதிகரித்துள்ளது. இவைகளின் மூலம் ரூ. 29,982 கோடி வசூலாகியுள்ளது. (சென்ற ஆண்டு ரூ.20,993).

இந்த நான்கு மாதங்களில் உபரி சலுகை வரியாக ரூ.1,260 கோடி வசூலாகியுள்ளது. சென்ற ஆண்டு நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது 44.34% அதிகம். (சென்ற ஆண்டு ரூ.873 கோடி)

பங்கு பரிவர்த்தனை வரியாக ரூ.2,164 கோடி வசூலாகியுள்ளது. சென்ற ஆண்டு நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது 15.46% அதிகம்.

வங்கியில் ரொக்கமாக பணம் எடுக்கும் போது விதிக்கப்படும் வரி மூலம் ரூ.223 கோடி வசூலாகியுள்ளது. சென்ற ஆண்டு நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது 33.75% உயர்வு.

வெப்துனியாவைப் படிக்கவும்