வியட்நா‌மி‌ல் நீர்மின் நிலையம்- பி.ஹெச்.இ.எல்

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (11:45 IST)
வியட்நாமில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளதாக பாரத் மிகு மின் நிலையம் (பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்) அறிவித்துள்ளது.

வியட்நாம் தலைநகர் ஹனாயில் இருந்து வடக்கில் 350 கி.மீட்டர் தொலைவில் உள்ள முனாங் லா மாவட்டத்தில் இரண்டு 100 மெகாவாட் திறன் மின் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையங்களை பாரத் மிகு மின் நிறுவனம் அமைக்கும். இவை 2010 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும். இதன் மதிப்பீடு ரூ.200 கோடி.

பாரத் மிகு மின் நிறுவனம் பல அந்நிய நாடுகளுக்கு மின் உற்பத்தி தேவையான பாய்லர், டர்பைன் உட்பட பல்வேறு இயந்திரங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இப்போது தான் முதன் முறையாக தென் கிழக்காசிய நாட்டில் மின் கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்கு வியட்நாம் அரசு நிறுவனமான பெட்ரோ-வியட்நாம், சாங் டா கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவன‌ங்களின் கூட்டு நிறுவனமான நாம் சின் ஹைடிரோ பவர் என்ற நிறுவனத்திடம் இருந்து நீர் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பாரத் மிகு மின் நிறுவனம் பெற்றுள்ளது.

இதன்படி நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான டர்பைன், ஜெனரேட்டர், டிரான்ஸ்பார்மர், உட்பட மற்ற இயந்திரங்கள், மின் பகிர்வு சாதனக்களை பாரத் மிகு மின் நிறுவனம் வடிவமைத்து தயாரித்து நிறுவும்.

இந்த நீர்மின் நிலையம் அமைப்பதற்கு, இந்திய அரசு வியட்நாமிற்கு அளிக்கும் கடன் உதவியில் இருந்து நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியை இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்சிம் பாங்க்) நிர்வகிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்