இந்திய மொழிகளில் தொலைகாட்சி : முர்டாக்!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:47 IST)
இந்தியாவின் ஆறு மொழிகளில் புதிய தொலைகாட்சி சானல்களை தொடங்க 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாக ரூபர்ட் முர்டாக் தெரிவித்தார்.

உலக அளவில் ஊடக ஜாம்பவானகக் கருதப்படும் நியூஸ் கார்ப்பரேஷன் சேர்மன் ரூபர்ட் முர்டாக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். ஸ்டார் தொலைகாட்சி உட்பட பல்வேறு நாடுகளில் செய்திப் பத்திரிக்கைகள், தொலைகாட்சி சானல்களை ஆகியவற்றை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு நியூஸ் கார்ப்பரேஷன் நடத்தி வருகிறது.

நியுஸ் கார்ப்பரேஷனைச் சேர்ந்த டோவ் ஜோன்ஸ், புதிதாக டோவ் ஜோன்ஸ் இந்தியா டைட்டன் 30 இன்டெக்ஸ் என்ற பங்குச் சந்தையின் அளவிடான குறியீட்டு எண்களை கணிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியின் போது ரூபர்ட் முர்டாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நியூஸ் கார்ப்பரேஷன் இந்தியாவில் அடுத்த 12 மாதங்களில் ஆறு இந்திய மொழிகளில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை துவங்க உள்ளது. இவை ஸ்டார் என்ற பெயரில் ஒளிபரப்பாகும். இதற்காக 100 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளோம்.

இந்தியவைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் செயல்பாடுகளை கணிக்கும் வகையில் டோவ் ஜோன்ஸ் இந்தியா டைட்டன் 30 இன்டெக்ஸ் தொடங்கியுள்ளோம்.

இதற்கு முக்கிய காரணம் உலக அளவில் பொருளாதார ரீதியாக, நிதிச் சந்தையில் அதிக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அக்கறை அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் முன்பு இருந்ததை விட, முதலீட்டிற்கான இடர்பாடுகளை அளவிடும் முறை மாறி உள்ளது. இதனால் முதலீடு செய்பவர்கள் பயன் அடையும் வகையில் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களை கணிக்கும் புதிய குறியீட்டு அவசியம்.

இந்த குறியீட்டு அட்டவனையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், இன்போசியஸ், ஹெச்.டி.எப்.சி., பர்தி ஏர்டெல், லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்று இருக்கும். இவை பெட்ரோலிய துறை, உலோக நிறுவனம், நிதி ஆகிய மூன்று துறைகளை பிரதிபலிப்பாதாக இருக்கும்.

இந்தியாவில் அதிக அளவு முதலீடு செய்யும் திட்டம் உள்ளது. மொபைல் போன் போன்ற ஊடகங்களில் கவனம் செலுத்துகிறது.

எங்கள் நிறுவனத்தில் இந்தியாவில் தற்போது 25 பத்திரிக்கையாளர்கள் பணி புரிகின்றனர். இது 75 ஆக உயர்த்தப்படும்.

இந்திய பத்திரிக்கை (அச்சு) நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பம் இல்லை. ஏனெனில் இவற்றில் அந்நிய நாட்டு முதலீட்டிற்கு 26 விழுக்காடு உச்சவரம்பு உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்