தேசிய பல்பொருள் முன்பேர சந்தை (நேஷனல் மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ்ச்) தலைமை அலுவலகத்தை மும்பைக்கு மாற்ற உள்ளது.
இந்த முன்பேர சந்தையின் 26 விழுக்காடு பங்குகளை வாங்க சம்மதித்து இருப்பதாக ரிலையன்ஸ் மணி அறிவித்தது. இதனை தொடர்ந்து தேசிய பல்பொருள் முன்பேர சந்தை தலைமை அலுவலகத்தை மும்பைக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் மணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், முன்பேர சந்தையின் இயக்குநர் குழுவில் சமீபத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்ட சுதிப் பந்தோபாதியா கூறுகையில், நாங்கள் இந்த முன்பேர சந்தையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளோம். இதில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதுடன், புதிய பொருட்களையும் வர்த்தகத்தில் இணைக்கப் போகிறோம். அத்துடன் மற்ற சந்தைகளுடன் கூட்டு சேர்ந்து, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று கூறினார்.
இந்த முன்பேர சந்தையின் மேலாண்மை இயக்குநர் கைலாஷ் குப்தா கூறுகையில், இதன் எல்லா வர்த்தகத்தையும் புனரமைக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக தலைமை அலுவலகத்தை அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மாற்ற உள்ளோம். இந்தியாவில் எங்கள் நிறுவனம் தான் முதன் முதலில் இணையம் வாயிலாக முனபேர வர்த்தகத்தை தொடங்கியது. நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையில் அலுவலகம் இல்லாததால் வளர்ச்சி அடைய முடியவில்லை என்று கூறினார்.