இணையம் மூலம் நகை விற்பனை அதிகரிப்பு!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (15:23 IST)
இணையதளம் வாயிலாக நகை வாங்குவது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கடையாக சென்று புதிய நகைகள் வந்துள்ளதா, எந்த கடையில் விற்பனை செய்யும் நகை பார்க்க கவர்ச்சியாகவும், அணிந்தால் அழகாகவும் இருக்கும் என்று அலசி ஆராய வேண்டும்.

இப்போது இந்த மாதிரி சிரமங்கள் இல்லாமல் வீட்டில், அலுவலகத்தில் இருந்தபடியே இணைய தளம் மூலம் நகை வாங்கும் வசதி உள்ளது.

இப்போது இணையம் வாயிலாக நகைகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது விற்பனையாகும் நகைகளில் 4 விழுக்காடு இணையம் மூலம் விற்பனையாவதாக மாடர்ன் ஜூவல்லர் என்ற வணிக இதழ் தெரிவித்துள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 5 விழுக்காடாக அதிகரிக்கும்.

இணையம் மூலம் தங்கம், வெள்ளி, வைர நகைகளை வாங்குவது அதிகரித்திருப்பதற்கு காரணம், பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்யும் நகைகளை, ஒரே இடத்தில் இருந்து கொண்டே, அலசி பார்த்து தேர்ந்தெடுக்க முடிகிறது. அத்துடன் விலையையும் ஒப்பிட்டு பார்க்கவும் வசதியாக உள்ளது.

இணையம் தங்க, வைர நகை வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல வியாபாரிகளுக்கும் பயன் அளிப்பதாக உள்ளது. இவர்கள் இணைய தளத்தில் புகைப்படம் உட்பட விற்பனை செய்யும் நகை பற்றிய விபரங்களை வெளியிடலாம். இவற்றை வாங்க விரும்புபவர்கள், இணையதளத்தில் நகைகளை தேர்ந்தெடுத்து வாங்குவார்கள்.

இதனால் நகை வியாபாரிகளுக்கும் விற்பனை அதிகரிக்கும். மும்பையில் சப்னா ஜூவல்ஸ் என்ற நிறுவனம் இணையம் மூலம் நகைகளை விற்பனை செய்கிறது. இவர்கள் நகை வாங்குபவர்களுக்கு பிடித்தமான வகையில் வைர நகைகளை தயாரித்து கொடுக்கின்றனர். இவர்கள் விற்பனை செய்யும் நகைகளுக்கு உத்திரவாதமும் கொடுக்கின்றனர். அத்துடன் அளவு மாற்றுவது, மெருகூட்டுவது போன்றவற்றையும் இலவசமாக செய்து கொடுக்கின்றனர். நகை வாங்குபவர்களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கின்றனர். சப்னா ஜூவல்சே கூரியர் செலவை ஏற்றுக் கொள்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்