கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி கடன் வாங்குபவர்களில், திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு, கடன் அட்டையை வழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தி மளிகை பொருட்கள் முதல் வைர நெக்லஸ் வரை வாங்கலாம். இதை தவணை முறையில் திருப்ப செலுத்தலாம், குறிப்பிட்ட நாட்கள் வரை வட்டி இல்லை என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வாரி இறைக்கின்றன. இதனால் கவரப்பட்டு பலர் கடன் அட்டையை வாங்கி விடுகின்றனர்.
இவர்களில் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
மும்பையில் நேற்று வங்கி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி துணை கவர்னர் வி.லீலாதர் செய்தியாளர்களிடம் பேசும் போது, கடன் அட்டையில் கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது கவலைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வங்கிகள், கடன் அட்டையை கொடுக்கும் போது, இதை பெறுபவர்களால் கடனை திருப்பி செலுத்த கூடிய அளவு வருமானம் உள்ளதா என்று பார்ப்பதில்லை.
கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருந்தாலும், மறு புறம் வங்கிகள் கடன் அட்டை கொடுக்கும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. கடன் அட்டையை கேட்காதவர்களுக்கு கூட, வங்கிகள் கொடுக்கின்றன என்று லீலாதர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஜூலை 29 ஆம் தேதி வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், இந்த ஆண்டு மே 23 ஆம் தேதி நிலவரப்படி, கடன் அட்டைகளில் இருந்து வங்கிகளுக்கு வரவேண்டிய நிலுவை ரூ. 26,596 கோடியாக உள்ளது. இது சென்ற மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 45 விழுக்காடு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.