பெட்ரோலிய நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்குத் தீர்வு!
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (13:37 IST)
பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண எல்லா முயற்சிகளையும் பெட்ரோலிய அமைச்சகம் மேற்கொள்ளும் என்று பெட்ரோலிய துறை கூடுதல் செயலாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை மத்திய அரசு நிர்ணயித்த விலையில் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இவை உற்பத்தி செலவை விட, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு ஆயில் பாண்ட் எனப்படும் கடன் பத்திரங்களை வழங்குகிறது.
மத்திய நிதி அமைச்சகம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு உரிய ஆயில் பாண்ட் வழங்கவில்லை.
பெட்ரோலிய நிறுவனங்களின் நடைமுறை மூலதனம் குறைவதால், இவைகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு அடைக்கும் புதிய சிலிண்டர் வாங்க முடியாத காரணத்தினால், புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுப்பதை நிறுத்தியுள்ளதாக நேற்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவித்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய துறை கூடுதல் செயலாளர் எஸ்.சுதர்சன், பெட்ரோலிய நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண அமைச்சகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்த பிரச்சனையை நிதி அமைச்சகத்திடம் எடுத்துக் கூறியுள்ளோம். அவர்கள் ரிசர்வ் வங்கியிடம் எடுத்துக் கூறி, பெட்ரோலிய நிறுவனங்களுக்கான கடன் வரம்பை அதிகரிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கோடி வரையும், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 கோடி வரையும் நடைமுறை மூலதனம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.