பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மீதான வட்டி விகிதத்தை 1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதேபோல் வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தையும் 0.75 முதல் 1 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வங்கிகளின் வட்டி, ரொக்க கையிருப்பு விகிதத்தை உயர்த்தியது.
பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, கடனுக்கான வட்டியை 1 விழுக்காடு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கடன்கள் மீதான வட்டி 14 விழுக்காடாக இருக்கும். இதேபோல் வைப்பு நிதிக்கு கொடுக்கப்படும் வட்டியும் 0.75 முதல் 1 விழுக்காடு வரை உயர்த்தப்படும்.
இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேர்மனும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் கே.சி. சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டும், வைப்பு நிதி செலுத்துபவர்களுக்கு வருவாய் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணவீக்கம் 12 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில் வைப்பு நிதிக்கு வட்டியை அதிகரிக்காவிட்டால், மக்களை சேமிக்கும் படி கூறமுடியாது. எங்களது கடன்கள் மீதான நிகர வருவாயும் 3.5 விழுக்காட்டிற்கும் குறையாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படுகிறது என்று கூறினார்.
மற்ற வங்கிகளும் கடன் மீதான வட்டி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை தொடர்ந்து வெளியிட உள்ளன.