பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
உள்நாட்டு சந்தையில் பருத்தி விலை அதிகரித்ததால், மத்திய அரசு பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இதன்படி ஏற்றுமதி செய்யப்படும் பருத்தி பற்றிய தகவல்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்தது.
பருத்தி உள்நாட்டு நூற்பு ஆலைகளுக்கு தாராளமாக கிடைக்கவும், இதன் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது. இதன்படி இந்த பருத்தி ஆண்டில் (செப்டம்பர் வரை) அதிகபட்சம் 80 லட்சம் பொதிகள் வரை (1 பொதி-170 கிலோ) ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.
இது தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசின் செயலாளர்கள் குழு மட்டத்திலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை மத்திய விவசாய அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சகம் கருத்து தெரிவித்ததற்கு பிறகு, வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு, தடை செய்யும் நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிகிறது.
பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்தால், உள்நாட்டு விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்காது. இதன் காரணமாக பருத்தி ஏற்றுமதி அளவுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கும், தடை விதிப்பதற்கும் விவசாய அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தெரிகிறது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு இறக்குமதி வரி நீக்கப்பட்டதற்கும் விவசாய அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் பருத்தி ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டால், பருத்தி விலை குறைந்துவிடும். தங்களுக்கு போதிய விலை கிடைக்காது என்று கருதி விவசாயிகள் பருத்தியை சாகுபடி செய்வதில் தயக்கம் காண்பிப்பார்கள்.
இது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், அடுத்த ஆண்டிற்கான பருத்தி சாகுபடி அக்டோபர் மாதத்தில் தொடங்கும். இப்போது விதிக்க எண்ணியுள்ள தடையால், அடுத்த பருவ சாகுபடி பாதிக்காது. அத்துடன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் நடவடிக்கை குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று வாதிடுகின்றனர்.
மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை கட்டாயமாக ஜவுளி ஆளுநரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் ஜவுளி ஆளுநரிடம் பதிவு செய்திருந்தால் மட்டுமே சுங்கத் துறை ஏற்றுமதிக்கு அனுமதிக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
பருத்தி விலை அதிகரித்ததால் ஜவுளி ஆலைகள், நூற்பாலைகள் பருத்தி ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும், ஏற்றுமதி சலுகையை ரத்த செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
மத்திய அரசு கடந்த இருபது நாட்களுக்கு முன்புவரை பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுவந்த 14 விழுக்காடு இறக்குமதி வரியை ரத்து செய்தது. அத்துடன் ஏற்றுமதிக்கு அளித்து வந்த சலுகையையும் ரத்து செய்தது.
இந்த பருத்தி பருவத்தில் 65 லட்சம் பொதி பருத்தி ஏற்றுமதியாகும் என்று பருத்தி ஆலோசனை குழு மதிப்பிட்டுள்ளது. ஆனால் ஜவுளி துறையினர் 100 லட்சம் பொதி ஏற்றுமதியாகும் என்று கருதுகின்றனர்.