ஜெனிவா : முட்டுக்கட்டையாக உள்ள அமெரிக்க பருத்தி மானியம்!
செவ்வாய், 29 ஜூலை 2008 (15:02 IST)
பருத்திக்கான மானியம், இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆகியவை ஜெனிவாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தை முடிவை எட்டுவதற்கு முட்டுக் கட்டையாக உள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் தோஹா மாநாட்டில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளில் உடன்பாட்டை எட்ட ஜெனிவாவில் கடந்த வாரத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இநதப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பும், வளரும் நாடுகளான இந்தியா, வெனிஜுலா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் பங்கேற்றுள்ளன. உலக வர்த்தக அமைப்பின் முக்கிய 30 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் சார்பில் வர்த்தக அமைச்சர் கமல்நாத் பங்கேற்றுள்ளார்.
ஜெனிவாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டுவதற்கு பருத்திக்கு வழங்கும் மானியம், இறக்குமதி கட்டுப்பாடு குறித்த அதிகாரம் ஆகியவற்றில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இது தற்போது முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜெனிவாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள இந்திய உயர் அதிகாரி கூறுகையில், பருத்திக்கு வழங்கப்படும் மானியம், இறக்குமதிக்கான கட்டுப்பாடு, தொழில் துறை உற்பத்தி இறக்குமதி ஆகியவையே பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மேற்கு ஆப்பிரிக்காவின் நான்கு முக்கிய பருத்தி உற்பத்தி நாடுகளான பெனின், புரிகினியா பாஸோ, சாட், மாலி ஆகிய நான்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மறுத்து வருகிறது. இதனால் பருத்திக்கு மானியம் குறித்து எவ்வித முடிவும் எட்ட முடியவில்லை.
ஹாங்காங்கில் நடந்த அமைச்சர் மட்டத்திலான பேச்சு வார்த்தையின் முடிவில், ஒட்டு மொத்த வர்த்தகத்தை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்கா வழங்கிவரும் பருத்திக்கான மானியத்தை விரைவாக நீக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி உலக வர்த்தக உடன்படிக்கை அமலுக்கு வரும் காலத்தில் இருந்து இரண்டு வருடத்திற்குள் அமெரிக்கா, அதன் பருத்தி விவசாயிகளுக்கு வழங்கிவரும் மானியத்தை 75 விழுக்காடு வரை குறைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்கா அதன் சுமார் 24 ஆயிரத்து 800 பருத்தி விவசாயிகளுக்கு 380 கோடி டாலர்களை மானியமாக வழங்கி வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டும் பருத்தி வர்த்தகம் முக்கியமான விஷயமல்ல. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கும் முக்கியமான விஷயமாகும்.
அமெரிக்கா அதன் பருத்தி விவசாயிகளுக்கு கொடுத்து வரும் மானியத்தை குறைத்தால், ஆப்பிரிக்கா, இந்தியா, பிரேசில் உட்பட மற்ற பருத்தியை சாகுபடி செய்யும் விவசாயிகள், அவர்கள் உற்பத்தி செய்யும் பருத்திக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலையைப் பெறுவார்கள்.
அமெரிக்கா அதன் பருத்தி விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதால், அங்கு அதிக அளவு பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் மற்ற நாடுகள் பருத்தி ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்படுகிறது.
இந்தியா பருத்தி உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் முன்னணி நாடாக இருப்பதுடன், ஏற்றுமதியும் செய்கிறது. இதனால் பருத்தி மானியப் பிரச்சனை இந்தியாவிற்கு முக்கியமான விசயமாகும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.