தென்னை நாரை மூலப் பொருளாகப் பயன்படுத்தும் கயிறு தொழில்களை பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் நவீனப்படுத்த கயிறு வாரியம் முடிவு செய்துள்ளது.
தென்னை நாரில் இருந்து கயிறு, மிதியடி, உள் அலங்கார பொருட்கள், மெத்தை உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வதுடன், அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கணிசமான அந்நியச் செலவாணி வருவாயாக கிடைக்கிறது. அத்துடன் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பும் உருவாகிறது.
இந்த தொழில்களை நவீனப்படுத்த கயிறு வாரியம் ரிமோட் என்ற பெயரில் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி கயிறு தொழில்களுக்கு புத்துயிர் அளித்தல், நவீனமயமாக்கல், தொழில் நுட்ப மேம்பாடு ஆகியவை அடங்கும்.
இந்த கடன் தென்னை மட்டையில் இருந்து நார் தயாரிப்பவர்கள், குடிசைத் தொழிலாகச் செய்பவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த கடனை தனி நபர்கள், சுய உதவிக் குழுக்கள், தென்னை நார் நூற்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், புதிதாக ஈடுபட விரும்புபவர்களுக்கு வழங்கப்படும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் ஏற்பட்டது. இதில் கயிறு வாரியம் சார்பில் அதன் செயலாளர் எம்.குமார ராஜா, பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் கே.நீலகண்டன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கயிறு வாரிய தலைவர் ஏ.சி.ஜோஸ் கூறும் போது, கயிறு வாரியத்தின் வரலாற்றிலேயே இதற்கு முன்பு இல்லாத வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதனால் கயிறு நூர்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும், நாரை மூலப் பொருளாக கொண்டு பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களும் பயன் அடைவார்கள் என்று கூறினார்.
இந்த திட்டம் ரூ.243 கோடி செலவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் மத்திய அரசு மானியமாக ரூ.99 கோடி வழங்கும்.
நூற்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைக்கு ரூ.2 இலட்சம் வரை அனுமதிக்கப்படும். இந்த கடனை பெறுபவர் ரூ.10 ஆயிரம் முதலீடாக செலுத்த வேண்டும். மானியம் ரூ.80 ஆயிரம் வழங்கப்படும். வங்கி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் குறைந்த வட்டியில் கடனாக வழங்கும். இந்த கடனை ஐந்து வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
வீட்டில் இருந்த படியே கயிறு பொருட்களை தயாரிக்கும் குறுந்தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை அனுமதிக்கப்படும். இதில் வங்கி ரூ.2 இலட்சத்து 75 ஆயிரம் கடனாக வழங்கும். மானியமாக ரூ.2 இலட்சம் வழங்கப்படும். தொழில் தொடங்குபவர் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.