தாமிரம் அலுமினியம் மீதான இறக்குமதி வரி ரத்து செய்ய கோரிக்கை!

செவ்வாய், 22 ஜூலை 2008 (17:52 IST)
தாமிரம், அலுமினியம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மின்சார சாதனங்கள் மற்றும் மின்னனு பொருட்கள் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசிடம் கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்துள்ளனர்.

இதன் விபரங்களை சங்கத்தின் தலைவர் விஜய் கரியா செய்தியாளர்களிடம் நேற்று இரவு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், இரும்பு கலப்பு உலோகம், கலப்பு அல்லாத உலோகத்திற்கான உற்பத்தி வரியை 14 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடாக குறைக்க வேண்டும். அத்துடன் உருக்கு, தாமிரம், அலுமினியம் ஆகியவைகளுக்கு 5 விழுக்காடு இறக்குமதி விதிக்கப்படுகிறது. இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

கேபிள்களின் இறக்குமதி வரியை 7.5 விழுக்காட்டில் இருந்து பத்து விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களாக மின் சாதனங்களின் உற்பத்தி வளர்ச்சி 15 விழுக்காடாக உள்ளது. இதில் மின்சார கேபிள்களின் உற்பத்தி வளர்ச்சி 21 விழுக்காடாக இருக்கிறது.

மின் துறை சார்ந்த தொழில்களுக்கு திறன் பெற்ற ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த துறையில் மின் உபகரணங்கள், விற்பனை நிலையங்கள், மின் சேவை நிறுவனங்களில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் அதிக அளவு தேவைப்படுகின்றனர். குறிப்பாக பொறியாளற்கள், நிர்வாக திறமை படைத்தவர்கள் தேவாயான அளவு கிடைக்காமல் பற்றாக்குறை நிலவுகிறது. பொறியியல் கல்லூரிகளின் பாடத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கேபிள் தாயரிப்பில் தரம் குறைந்த தாமிர, அலுமினியம் கம்பிகள், பி.வி,சி பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மின்சார விநியோகத்தில் அதிக அளவு இழப்பு ஏற்படுகிறது. உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக அளவு மின் விநியோகத்தின் போது மின்சாரம் இழப்பு ஏற்படுகிறது. தரமான கேபிள்கள், கண்டக்டரை பயன்படுத்தினால் மின் இழப்பை கணிசமாக தவிர்க்கலாம்.

மாநில மின்வாரியங்கள், மற்ற கேபிள் பயன்படுத்தும் நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த கேபிள் தயாரிப்பு நிறுவனங்கள் கேபிள் விற்பனை செய்த பணத்தை பெறுவதற்கு பாதகமான விதிமுறைகள் உள்ளன. அந்நிய நாட்டு நிறுவனங்கள் லெட்டர் ஆப் கிரேடிட் எனப்படும் வங்கி உத்தரவாதம் பெற்று விரைவாக பணத்தை பெற்றுக் கொள்கின்றன.

இந்திய நிறுவனங்கள் அந்நிய நாடுகளுக்கு கேபிள் ஏற்றுமதி செய்யும் போது, இவை அந்த நாடுகளின் பரிசோதனை கூடத்தில் தரப்பரிசோதனை செய்யப்படுகின்றன.

ஆனால் அந்நிய நாட்டு நிறுவனங்கள், இந்தியாவிற்கு கேபிள் விற்பனை செய்தால், அதை இங்கு எவ்வித தரப் பரிசோதனையும் செய்யப்படுவதில்லை என்று இந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் எம்.காந்தி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்