பங்குச் சந்தை சரிவால் கலவரம்!

வெள்ளி, 18 ஜூலை 2008 (17:20 IST)
பாகிஸ்தானின் முக்கிய பங்குச் சந்தையான கராச்சி பங்குச் சந்தையில், நேற்று பங்குகளின் விலைகள் 18 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை முன்பு கலவரத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை கலைக்க ராணுவமும், காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, பொருளாதாரம் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதால் கராச்சி பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன் முக்கிய அளவுகோலான 100 பங்குகள் பிரிவு குறியீட்டு எண் நேற்று 279 புள்ளிகள் சரிந்தது. இது 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு இல்லாத அளவிற்கு குறைவாகும்.

இந்த பங்குச் சந்தையில் தொடர்ந்து 15 நாட்களாக குறியீட்டு எண்கள் சரிந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை முன்பு திரண்டு பங்கு வர்த்தகத்தை நிறுத்தும் படி கலவரத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் பங்குச் சந்தை மீதும், அருகில் உள்ள வங்கி மீதும் கல்லெறி தாக்குதல் நடத்தினார்கள். சாலையில் டயர்களையும் எரித்தனர். இவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். ராணுவமும் வரவழைக்கப்பட்டது.

பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப் சென்ற வருடம் அவசர நிலை காலத்தில் நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தும் விவகாரத்தில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், நவாஸ் செரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. நவாஸ் செரிப் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது.

அத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது.

இது போன்ற காரணங்களினால் பஙகுச் சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்