இந்தியாவில் இருந்து 400 வகை மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் உயிர்காக்கும் மருந்துகளின் விலை 40 விழுக்காடு வரை அதிகரிக்கப் போகிறது. இதன் விலை குறையவும், தாராளமாக கிடைக்கவும் இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்வதை அனுமதிக்க பாகிஸ்தான் வர்த்தக அமைச்சகம் முடிவு செய்தது.
இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யக் கூடாது என அந்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் பாகிஸ்தான் அரசை தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
இதனால் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா கிலானி, பாகிஸ்தானில் தயாரிக்கும் எவ்வித மருந்தையும் இறக்குமதி செய்யக் கூடாது. பாகிஸ்தானில் தயாரிக்காத 13 வகை தடுப்பூசி மருந்துகள் உட்பட மற்ற வகை மருந்துகளை மட்டுமே தொடர்ந்து இறக்குமதி செய்யலாம் என உத்தரவு பிறப்பித்து இருப்பதாக பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் டான் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் நல்வாழ்வு துறை செயலாளர் குஸ்நூட் டகாரி, வர்த்தக செயலாளர் அஸிப் ஷாவை சந்தித்து, இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் யோசனையை கைவிடும் படி வற்புறுத்தியாதக தெரிகிறது.
இந்தியாவில் இருந்து மருந்து இறக்குதி செய்ய வர்த்தக அமைச்சகம் ஆலோசனை கூறியிருப்பதை, அந்த அமைச்சகத்தில் பணியாற்றுபவர்கள், மருந்து தயாரிப்பவர்களுக்கு தெரிவித்தனர். இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும் முயற்சியை மருந்து தயாரிப்பவர்கள் மேற்கொண்டனர்.
இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்வதால், உள்நாட்டில் பத்து லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். அத்துடன் 120 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியும் பாதிக்கப்படும் என்று உள்நாட்டு மருந்து தாயாரிப்பாளர்கள் அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
பாகிஸ்தானில் மருந்து தொழில் 83 பில்லியன் டாலர் மதிப்பு உடையது. இவர்களுக்கு அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கும் இருக்கிறது.
அதே நேரத்தில் நல்வாழ்வு அமைச்சகத்தின் மருந்து விலை ஆலோடனை குழு, பல்வேறு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை 10 முதல் 40 விழுக்காடு வரை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது என்று டான் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.