உருக்கு குழாய்கள் குறைந்த விலையில் விற்பனை!

வியாழன், 17 ஜூலை 2008 (17:26 IST)
உருக்கு பொருட்களின் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவிகரமாக இரும்பு குழாய்களை குறைந்த விலையில் விற்பனை செய்வது என இந்திய தொழில்களின் கூட்டமைப்பு (Federation of Indian Industries -FII) முடிவு செய்துள்ளது.

சிறு, குறுந்தொழில் பிரிவில் உள்ள தொழிற்சாலைகள் பல்வேறு பொருட்களை தயாரிக்க உருக்கு குழாய்களை பயன்படுத்துகின்றன. உருக்கு குழாய் உட்பட உருக்கு, இரும்பு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பணவீக்க அளவும் உயர்கிறது. இவற்றின் விலை அதிக அளவு உயராமல் இருக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு உதவிகரமாக இந்திய தொழில்களின் கூட்டமைப்பு இ.ஆர்.டபிள்யூ. எம்.எஸ். ரக குழாய்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்வது என முடிவெடுத்துள்ளது. இவை குறைந்த அளவு பயன்படுத்தும் சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு 1 டன் ரூ.48 ஆயிரம் (உருக்கு ஆலை வாயில்) என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

உருக்கு குழாய் தயாரிக்கப் பயன்படும் கச்சா பொருட்களின் விலை அதிகரிக்காத வரை, இந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

உருக்கு குழாய் தயாரிக்க பயன்படும் உருக்கு தகடுகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. இதனால் உருக்கு குழாய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிக சிரமங்களை சந்திக்க வேணடியுள்ளது.

இதனை தவிர்க்க இந்த கூட்டமைப்பில் உள்ள தொழிற்சாலைகளுக்கு உருக்கு தகடுகள் கிடைக்க இந்திய உருக்கு ஆணையத்திடம் (SAIL) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன் படி செயில் உருக்கு தகடுகள் வழங்கும். இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான உருக்கு தகடுகள் கிடைப்பதில்லை. தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்த மாதத்திற்கு தேவையான 40 விழுக்காடு உருக்கு தகடுகளை செயில் வழங்கும் என்று கூட்டமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்