விலைகள் குறையவில்லை-சிதம்பரம்!

வியாழன், 17 ஜூலை 2008 (17:21 IST)
பல்வேறு பொருட்களின் விலை குறையாமல் உள்ளது. ஆனால் பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

மத்திய அரசு பணவீக்கம் குறித்த புள்ளி விவரத்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை நண்பகலில் வெளியிட்டு வந்தது. இந்த வாரம் முதல் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் வெளியிடுகின்றது.

பணவீக்கம் பற்றிய விவரத்தை வெளியிடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் நிதி அமைச்சர் விலை குறையவில்லை என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சிதம்பரம் பேசுகையில், நான் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டியை சந்தித்தேன். அவர் விலைவாசி குறையவில்லை என்று தெரிவித்தார், அவரின் கருத்தை நானும் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன்.

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கையின் பலன்கள் தெரிய சில நாட்களாகும் என்று தெரிவித்தார்.

கால் மணி எனப்படும் வங்கிகளின் அன்றாட பண இருப்பில் குறையும் பணத்திற்கான வட்டி விகிதம், பணப்புழக்கத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் அளவு கோலாக கருதலாம். இதனை பார்க்கும் போது பணப்புழக்கம் குறைந்திருப்பது தெரியவருகிறது என்று சிதம்பரம் தெரிவித்தார்.

தற்போது கால் மணிக்கான வட்டி விகிதம் 7 முதல் 9.1 விழுக்காடு வரை உள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி, இந்த வார தொடக்கத்தில் நிதி அமைச்சகத்தின் நிலை குழு உறுப்பினர்களை சந்தித்து விளக்கினார். இதற்கு பின் நிதி அமைச்சரை சந்திததார்.

ரிசர்வ் வங்கி சென்ற மாதம் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை 8.25 விழுக்காட்டில் இருந்து 8.75 விழுக்காடாத உயர்த்தியது. வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டியையும் 7.75 விழுக்காட்டில் இருந்து 8.50 விழுக்காடாக அதிகரித்தது.

பணப்புழக்கம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஜூலை 29ஆம் தேதி அறிவிக்க இருக்கும் காலாண்டிற்கான கடன் கொள்கையின் போது வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம், வங்கி கடனுக்கான வட்டியை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்