சர்க்கரை உற்பத்தி 25% குறையும்!

புதன், 16 ஜூலை 2008 (16:12 IST)
சர்க்கரை உற்பத்தி அடுத்து ஆண்டு 25 விழுக்காடு குறையும். இதனால் இனி வரும் மாதங்களில் சர்க்கரை விலை 26 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள 12 மாத காலம் சர்க்கரை ஆண்டு என கணக்கிடப்படுகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடியும் சர்க்கரை ஆண்டில் இதன் உற்பத்தி 200 லட்சம் வரை குறையும் என்று தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு தலைவர் வினய் குமார் தெரிவித்தார்.

சர்க்கரை உற்பத்தி குறைவதாலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் தாவர எரி எண்ணெய் தேவை அதிகரிக்கும். இதனால் சர்க்கரை விலை 26 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளது என்று வினய் குமார் தெரிவித்தார்.

சர்க்கரை ஆலைகள் சென்ற வருடம் விவசாயிகளுக்கு கரும்பு வெட்டுவதற்கான உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்தில் வழங்கவில்லை. அத்துடன் கரும்புக்கான விலை நிர்ணயிப்பதில் சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக உத்தர‌ப்பிரதேசத்தில் கரும்பு விலை குறித்த வழக்கு உச்சநீதி மன்றம் வரை சென்றுள்ளது.

இதுபோன்ற காரணங்களினாலும், கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள், நெல், சோயா, மக்காச்சோள சாகுபடிக்கு மாறிவிட்டனர். இவர்கள் வேறு பயிருக்கு மாறுவதற்கு மற்றொரு காரணம் இவைகளுக்கு அதிக விலை கிடைக்கின்றது.

இந்த வருடம் சென்ற வாரம் வரை 40 லட்சத்து 31 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 19 விழுக்காடு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்கி வந்தது. இந்த ஊக்கத் தொகை வழங்குவதை அரசு ரத்து செய்துள்ளது. அத்துடன் உள்நாட்டில் அதிக விலை கிடைப்பதால், அடுத்த வருடம் சர்க்கரை ஏற்றுமதி குறையும்.

இந்த சர்க்கரை ஆண்டு தொடங்கும் அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்தியாவில் சர்க்கரை இருப்பு 120 லட்சம் டன் இருக்கும். நேஷனல் கமோடிட்டிவ் அண்ட் டிரைவிட்டிஸ் எக்‌‌ஸ்சேஞ்சில் (முன்பேர சந்தை) ஆகஸ்ட் மாத சர்க்கரை விலை 100 கிலோ ரூ.1,626 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய விலையை விட 4 விழுக்காடு அதிகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்