பங்குச் சந்தையில் காப்பீடு நிறுவனங்கள் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு!

செவ்வாய், 15 ஜூலை 2008 (18:37 IST)
பங்குச் சந்தை சரிவை சந்தித்து வந்தாலும் உள்நாட்டு காப்பீடு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தொடர்ந்து பங்குகளை வாங்குகின்றன.

இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரை காப்பீடு நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் ரூ.15,000 கோடி முதலீடு செய்துள்ளன ( சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 4 மடங்கு).

காப்பீடு செய்து கொள்பவர்கள், காப்பீடு நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள பங்குச் சந்தை முதலீட்டுடன் கூடிய காப்பீடு திட்டத்தில் சேர்கின்றனர். தற்போது பங்கு விலைகள் குறைவாக இருப்பதால், இந்த பணத்தில் காப்பீடு நிறுவனங்கள் பங்குகளை வாங்குகின்றன.

இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய காப்பீடு கழகம் (LIC) ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு ( சென்ற வருடம் காலாண்டில் 7,400 கோடி) செய்துள்ளதாக தெரிகிறது.

மும்பை பங்குச் சந்தையின் புள்ளி விபரங்களின்படி, இந்த காலாண்டில் உள்நாட்டு காப்பீடு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை மொத்தம் ரூ.20,306 கோடி முதலீடு செய்துள்ளன (சென்ற வருட காலாண்டு ரூ.8,471).

செபியின் புள்ளி விவரப்படி பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.3,131 கோடி முதலீடு செய்துள்ளன (சென்ற வருட காலாண்டு ரூ.4,152).

இதை தவிர்த்து வங்கி, காப்பீடு போன்ற மற்ற உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.17,175 கோடி முதலீடு செய்துள்ளன (சென்ற வருட காலாண்டில் ரூ.4,152).

செபியின் புள்ளி விபர அடிப்படையில் காப்பீடு நிறுவனங்கள் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்