எரிவாயுவில் ஒடும் கார் - யுண்டாய் அறிமுகம்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (16:12 IST)
யுண்டாய் கார் நிறுவனம் அடுத்த மாதத்தில் திரவ எரிவாயுவில் (எல்.பி.ஜி.) ஓடும் கார்களை அறிமுகப்படுத்த போகிறது.

சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் யுண்டாய் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு சான்ட்ரோ, ஆசென்ட் உட்பட பல ரக கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன், அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் தலைவர் அசோக் ஜா இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, நாங்கள் அடுத்த மாதம் திரவ எரிவாயுவில் ஓடும் சான்ட்ரோ, ஆசென்ட் ரக கார்களை அறிமுகம் செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்நிறுவனம் சென்ற வருடம் சி.என்.ஜி. எரிவாயுவில் ஒடக்கூடிய சான்ட்ரோ கார்களை அறிமுகம் செய்தது. இதே எரிவாயுவில் ஓடும் ஆசென்ட் ரக கார்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இதற்கு தேவைப்படும் சி.என்.ஜி., எல்.பி.ஜி. உபகரணங்களை தென் கொரியாவைச் சேர்ந்த சி.இ.வி. மற்றும் மொடானிக் நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்கிறது.

இது பற்றி அசோக் ஜா கூறுகையில், இந்த நிறுவனங்கள் சி.என்.ஜி., எல்.பி.ஜி. உபகரணங்களில் நவீன மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த நிறுவனங்களை இந்தியாவிற்கு வந்து இந்த உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும்படி அழைத்துள்ளோம்.

இதில் மொடானிக் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் யுண்டாய் தொழிற்சாலை அருகே அதன் தொழிற்சாலையை அமைக்கும்.

சி.இ.வி. நிறுவனம் டில்லி அருகே தொழிற்சாலையை அமைக்கும். இப்போது ஹுன்டாய் நிறுவனத்திற்கு தென் கொரியாவைச் சேர்ந்த 43 நிறுவனங்கள் உட்பட மொத்தம் 108 நிறுவனங்கள் கார் தயாரிக்க தேவையான பல்வேறு பாகங்களை வழங்குகின்றன.

இப்போது யுண்டாய் தொழிற்சாலை வருடத்திற்கு 6 லட்சம் கார்கள் தாயாரிக்கும் திறன் உள்ளதாக இருக்கின்றது. இதை 6 லட்சத்து 40 ஆயிரம் கார் தயாரிக்கும் திறன் உள்ளதாக விரிவுபடுத்தப் போகிறோம் என்று அசோக் ஜா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்