பணவீக்கம் 11.89 விழுக்காடாக உயர்வு!

வெள்ளி, 11 ஜூலை 2008 (16:44 IST)
இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு படி, ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.89 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 11.63 விழுக்காடாக இருந்தது (கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.42 விழுக்காடாக இருந்தது).

ரிசர்வ் வங்கி பணவீக்கம் 5.5 விழுக்காட்டிற்கு மேல் உயராது என்று கணித்திருந்தது. இதன் கணிப்பிற்கு மாறாக தொடர்ந்து 20 வாரங்களாக பணவீக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இந்த வாரத்தில் மொத்த விலை குறியீட்டு எண் 0.4 % அதிகரித்து 238.1 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த விலை குறியீட்டு எண் அட்டவணையில் அத்தியாவசிய பொருட்களின் பிரிவு 0.5 % உயர்ந்து, 244.3 ஆக உயர்ந்துள்ளது.

உணவு பொருட்களின் குறியீட்டு எண் 0.5% உயர்ந்து 234.8ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பழம், காய்கறி, மைசூர் பருப்பு, சோளம் ஆகியவற்றின் விலை 2%, உளுந்து, துவரம் பருப்பு, மல்லி, பார்லி மற்றும் மசாலாப் பொருட்களின் விலை 1% அதிகரித்துள்ளதே.

அதே நேரத்தில் மக்காச் சோளத்தின் விலை 3% குறைந்துள்ளது
(சென்ற வாரம் மக்காச் சோளம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது நினைவிருக்கலாம்).


எண்ணெய் வித்துக்களின் விலை எள் 7%, ஆமணக்கு விதை, சுரியகாந்தி 5%, பருத்தி, கொப்பரை தேங்காய், எண்ணெய் கடுகு விலை தலா 4%, நிலக்கடலை 1% மற்றம் புகையிலை 2% உயர்ந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் விலை 11%, கடுகு எண்ணெய் 5%, சோயா எண்ணெய் 4%, நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய் தலா 2%, நாட்டு சக்கரை 1% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 1% , பருத்தி விதை எண்ணெய் 2% புண்ணாக்கு விலை 1% குறைந்துள்ளது.

பர்னேஷ் எண்ணெய், பெட்ரோலிய வகைகளின் விலையில் மாற்றம் இல்லை இதனால் இந்த பிரிவு அட்டவணையில் மாற்றமில்லை.

ஜவுளி பிரிவில் அட்டவணையின் எண் 2.5% அதிகரித்து 139.6 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் சிட்டா நூல் விலை 9%, பாலியெஸ்டர் நூல் 8, பின்னலாடை 3, பருத்தி நூல் 1%, துணிவகைகள் 2% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் முறுக்கு நூல் விலை 2% குறைந்துள்ளது.

இராசயண பொருட்கள் மொத்த விலை குறியீட்டு எண் 1.2% அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அமோனியம் சல்பேட் விலை 34%, ஆம்பிலிசிரின் டிரைஹைரேட் 15% அதிகரித்துள்ளது.

பென்சிலின் விலை 3%, கால்சியம் அமோனியம் நைட்ரேட் 2%, ஆக்ஸிஜன் 1% குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வைட்டமின் மாத்திரை விலை 1% குறைந்துள்ளது.

உலோக பிரிவு குறியீட்டு எண் 0.8% குறைந்துள்ளது
இதற்கு காரணம் மென் இரும்பு விலை 8%, உருக்கு தகடு வகை 6%, இரும்பு கம்பி விலை 3%, மற்ற வகை உருக்கு பொருட்கள் விலை 2% குறைந்ததே.

வெப்துனியாவைப் படிக்கவும்