இந்தியாவில்தான் முதன் முதலில் கரும்பு பயிர் செய்யப்பட்டது. கரும்பில் இருந்து சர்க்கரை தயாரித்த நாடும் இந்தியாதான்.
உலக அளவில் அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக சர்க்கரை உற்பத்தியிலும், அதன் துணை தொழில்களிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கும் சர்க்கரை வழங்கும் வகையில் சர்க்கரை ஆலைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.
இந்தியாவில் 450 லட்சம் கரும்பு விவசாயிகள் உள்ளனர். அத்துடன் கிராமப்புறங்களில் வாழும் அதிகமான விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாகவும் இருக்கிறது.
இந்தியாவில் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளி துறை விளங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக கரும்புச் சாகுபடியில் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை துறைக்கான மாநாடு “சுகர் ஆசியா 2008” என்ற பெயரில் புது டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு வருகின்ற ஜூலை 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் இந்தியாவில் இருந்தும் மற்ற ஆசிய நாடுகளில் இருந்தும் சர்க்கரை துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள், இதனுடன் தொடர்புடையவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த கருத்தரங்குகளில் சர்க்கரை தொழிலின் தொழில் நுட்ப வளர்ச்சி, வர்த்தக வாய்ப்பு, ஏற்றுமதி-இறக்குமதியாளர் சந்திப்பு ஆகியவையும் நடைபெறும்.
இந்த கருத்தரங்குகளில் எரி சாரயம் தயாரித்தல், எத்தனால் உற்பத்தி, மின் உற்பத்தி, பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கான தொழில் நுட்பம் போன்றவைகளும் விவாதிக்கப்படும்.
அத்துடன் புதிய வகை கரும்பு, நவீன முறையில் கரும்பு வெட்டுதல், கரும்பை சுத்திகரித்தல் போன்றவைகள் குறித்தும் விவாதிக்கபபடும்.
இந்த கண்காட்சியில் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் கரும்பு சாகுபடி, வெட்டுதல், சர்க்கரை தயாரிப்பு, கரும்பு பாகில் இருந்து எரிசாராயம்,எதனால், மின் உற்பத்தி போன்றவைகளுக்கு தேவையான நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை நெக்ஸ்ஜென் எக்சிபிஷன் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் இயக்குநர் வி.கே.பன்சால் கூறுகையில், இந்த நிகழ்ச்சி சர்க்கரை, அதன் துணை பொருள்களின் உற்பத்தியார்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதி-இறக்குமதியாளர்கள் ஆகியோர் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.