மத்திய அரசால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், பணவீக்கத்திற்கு காரணம் சில பொருட்களின் விலை உயர்வுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 11.42 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளின் ரொக்க இருப்பு, வட்டியை உயர்த்தியும் பணவீக்கம் குறையவில்லை.
மத்திய அரசால் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பணவீக்கம் உயர்வதை தடுக்க முடியவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்நிலையில் பால், பருத்தி, இரும்பு, உருக்கு, பெட்ரோலிய பொருட்கள் ஆகிய சில பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்தது தான் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம். எல்லா பொருட்களின் விலையும் அதிகரிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தை கணக்கிடும் விலை அட்டவணையில் முதன்மை பொருட்கள் வரிசையில் உள்ள இரும்பு தாது, பருத்தி, பால், மீன், பழங்கள் ஆகிய ஐந்து பொருட்களின் விலைகள் பணவீக்க கணக்கீட்டில் 60 விழுக்காடு மதிப்பு பெறுகின்றன.
உற்பத்தி பொருட்களின் கணக்கீட்டில் உள்ள எட்டு பொருட்களில், ஆறு பொருட்கள் இரும்பு மற்றும் உருக்கினால் தயாரிக்கப்படுபவைகளாக உள்ளன.
எரி பொருள் கணக்கீட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவைகளின் விலையை அரசு உயர்த்தியது. அரசின் விலை கட்டுப்பாட்டில் இல்லாத விமான பெட்ரோல், நாப்தா, அதிவேக டீசல் போன்றவற்றின் விலை உயர்வும் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம்.
30 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அட்டவணையில் சோளம், பயத்தம் பருப்பு, உளுந்து, உருளை கிழங்கு, வெங்காயம், குளத்து மீன் ஆகியவற்றின் விலை குறைந்திருந்தது என்று அரசு தெரிவித்துள்ளது.