அரிசி ஏற்றுமதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!

திங்கள், 30 ஜூன் 2008 (17:48 IST)
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து பல ஏற்றுமதியாளர்கள், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு உயர் நீதிமன்றங்களில் 44 வழக்குகள் விசாரணயில் உள்ளன.

இந்த எல்லா வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கும் வகையில், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த நான்கு அரிசி ஏற்றுமதி நிறுவனங்கள், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்தை தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் மத்திய அரசின் தடைக்கு எதிராக, சுமார் 35 ஆயிரம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது.

அதே நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரிசி ஏற்றுமதி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் தடை உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனேவ அரிசி ஏற்றுமதி தடை தொடர்பான வழக்கில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்படுவதால், எல்லா வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கும் வகையில், உச்சநீதி மன்றத்திற்கு வழக்குகளை மாற்றம் படி சென்ற வெள்ளிக் கிழமையன்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, விடுமுறைக்கால நீதிமன்றத்தின் முன்பு இன்றோ அல்லது நாளையோ விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பதால், உள்நாட்டுச் சந்தையில் தாரளமாக அரிசி கிடைப்பதற்கும், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதியன்று பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, அரிசி ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற வகையில் தடையை சிறிது காலம் நிறுத்தியது.

இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும், உலக சந்தையிலும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரிசி இருப்பு குறைந்துள்ளது.

இதே மாதிரி அரிசி ஏற்றுமதி செய்ய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. பிறகு ஏற்றுமதியாளர்களின் நிர்ப்பந்தங்கள் காரணமாக, ஏற்றுமதிக்காக துறைமுக கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள அரிசியை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்