சீனா‌வி‌ல் நிலநடுக்கம் - இ‌ந்‌தியா‌வி‌ல் பட்டு தொழில் பாதிப்பு!

திங்கள், 30 ஜூன் 2008 (16:06 IST)
சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்தியாவில் பட்டு நூல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பட்டு சேலை உற்பத்தி நிலையங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பட்டு நூலால் உற்பத்திய செய்யப்படும் ஜவுளி ரகங்கள் மூலம் வருடத்திற்கு ரூ.10,000 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகின்றது. இந்திய பட்டு நெசவு நிறுவனங்களுக்கு தேவையான பட்டு நூலில் பெரும் பகுதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

சீனாவில் சியாசன் பிராந்தியத்தில், கடந்த மாதம் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த பிராந்தியத்தில் இருந்து அதிக அளவு பட்டு நூல், பட்டு கூடு இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு பட்டு புழு உணவான மெல்பரி மரத் தோட்டங்கள், பட்டு நூல் உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்கள் நிலநடுக்கத்தால் அழிந்து போய்விட்டன. இதனால் பட்டு நூல் உற்பத்தி முழுவதும் நின்று போய் விட்டது.

இதனால் இந்தியாவில் பட்டு நூல் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதன் விலை 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் பட்டு நெசவு தொழில் அதிக அளவில் நடக்கும் வாரணாசி, பெங்களூரு, மதுரை, கோவை, பகல்பூர் ஆகிய இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கைத்தறி நெசவு கூடங்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பட்டு நெசவாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இது குறித்து இந்திய பட்டு ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் டி.வி.மாருதி கூறுகையில், சியாசனில் ஏற்பட்டு நில நடுக்கம். மழை வெள்ளத்தால் இந்தியாவின் பட்டு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விலைகள் 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்