ரயில்வே சரக்கு கட்டணம் உயர்வு!

வியாழன், 26 ஜூன் 2008 (18:25 IST)
உணவு தானியம், உரம், கனிம பொருட்கள், நிலக்கரி உட்பட பல்வேறு பொருட்களின் சரக்கு போக்குவரத்து கட்டணத்தை ரயில்வே 5 முதல் 7 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட புதிய கட்டண விகிதம் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

உருக்கு, இரும்பு, சிமென்ட், இரும்பு தாது ஆகியவைகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

ரயில்வேயின் மொத்த சரக்கு போக்குவரத்து அளவில் 40 விழுக்காடு இடம் பெறும் நிலக்கரிக்கு 5 விழுக்காடு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாக்ஸைட், சுண்ணாம்பு கல், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவைகளுக்கு 7 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில்வேயின் சரக்கு கட்டண அட்டவனைப் பட்டியலின் 120 வரிசையில் கீழ் உள்ள உரம், உணவு தானியம், மாவு பொருட்கள், பருப்பு, சிறு தானியம், பிண்ணாக்கு, எண்ணை வித்து, தோல், ரப்பர், பிளாஸ்டிக், இயந்திரம், இயந்திர கருவிகள் ஆகியவைகளின் சரக்கு கட்டணம் 7 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு சில வாரங்களுக்கு முன் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது. அப்போது ரயில்வே அமைச்சர் லாலு யாதவ், சாலை சரக்கு போக்குவரத்துடன் போட்டியிடும் வகையில் ரயில்வே சரக்கு கட்டணத்தை குறைக்கும் எல்லா சாத்தியக் கூறுகளையும் ஆராயும் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் இதற்கு மாறாக ரயில்வேயின் சர்க்கு போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

சிக்கிம் வர்த்தகர்கள் எதிர்ப்பு!

ரயில்வே சரக்கு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சிக்கிம் வர்த்தக சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சிக்கிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் கூறுகையில், எல்லா பொருட்களுக்கும், அட்டவணை 120 எண் கீழ் உள்ள உரம், உணவு தானியம், பருப்பு, எண்ணெய் வித்து, உப்பு போன்ற பொருட்களுக்கு 7 விழுக்காடு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு ரயில்வே அமைச்சர் லாலு யாதவ், சாலை போக்குவரத்து துறையுடன் போட்டியிடும் வகையில், ரயில்வே சரக்கு கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவித்ததற்கு எதிரானது.

சிக்கிம் உட்பட வட கிழக்கு மாநிலங்கள, பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து வெது தொலைவில் அமைந்துள்ளன. போக்கு வரத்து கட்டண உயர்வால் இங்கு வாழும் மக்களின் சுமை அதிகரிக்கும். இதனால் வடகிழக்கு மாநில மக்கள் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்