ஓபெக் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்தது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும், இதனை பயன்படுத்தும் நாடுகளுக்கிடையான கூட்டம் நேற்று நடைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா உட்பட பல நாடுகள் கோரி வருகின்றன.
இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஓபெக் அமைப்பின் தலைவரும், அல்ஜிரியாவின் எரிசக்தி மற்றும் சுரங்க துறை அமைச்சருமான சாகிப் கெலில் அறிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது கச்சா எண்ணெய் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே வேறுபாடு இல்லை. சந்தை தேவைக்கு தகுந்தாற்போல் உற்பத்தி உள்ளது. இதனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஓபெக் கருதுகிறது.
ஓபெக் நாடுகளின் அடுத்த கூட்டம் செப்டம்பரில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பு உற்பத்தியை அதிகரிப்பது பற்றி ஆலோசிக்க ஜூன் மாதத்திலேயே கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் கச்சா எண்ணை அமைச்சர் அலி-அல்-நயாமி பேசுகையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதால் மட்டுமே இதன் விலை உயர்வை தடுக்க முடியாது. நீண்ட காலத்திற்கு கச்சா எண்ணெய் தேவை எனில், இதனை குறைவாக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. இதனால் முன்பேர சந்தையில் விலை அதிகரிக்கிறது.
இத்துடன் உலக அளவில் நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் போன்ற பண்டக சந்தையில் முதலீடு செய்கின்றனர். இதவே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறுனார்.
அதே நேரத்தில் தேவை ஏற்பட்டால் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயங்கமாட்டோம் என்று குவைத் தெரிவித்தது.
இதன் கச்சா எண்ணெய் அமைச்சர் முகமது-அல்-ஒலைம் கூறுகையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே மாதிரியாக இருப்பதற்கு குவைத் ஆதரவளிக்கும். உலக சந்தையில் தேவையான அளவு கிடைக்க செய்யும் என்று தெரிவித்தார்.