கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவிற்கும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இதற்கு முன்பு எட்டாத அளவாக ரூபாயின் பணவீக்கம் 8.75 விழுக்காடாக அதிகரித்ததுள்ளது.
பணவீக்கம் மே 31ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில, 8.75 விழுக்காடாக அதிகரித்தது. இதற்கு முந்தைய வாரத்தில் (மார்ச்24) 8.24 விழுக்காடாக இருந்தது.
சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.09% ஆக இருந்தது.
மே 31ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், உணவு பொருட்கள், காய்கறி பழங்களின் விலை அதிகரித்ததே.
அத்துடன் சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எல்லா பெருட்களின் விலையும் அதிகரிக்கும் என்ற கவலை எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.
நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் பால், பருப்பு வகைகள், தனியா, மஞ்சள் போன்ற நறுமண பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, எதிர்வரும் தேர்தலை சந்திக்க இருக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு பெரிய சவாலாக எழுந்துள்ளது.
இதற்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004ஆம் வருடம் ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 8.33 விழுக்காடாக இருந்தது. இதுவே அதிகபட்ச பணவீக்கம்.
தற்போதைய பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வினால் ஜூன் மாதத்தில் பணவீக்கம் 9 விழுக்காட்டை தாண்டிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி புதன் கிழமை வட்டி விகிதத்தை கால் விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதம் முன்பு 7.75 விழுக்காடாக இருந்தது. அதனை எட்டு விழுக்காடாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வங்கிள் தொழில் துறைக்கும், நுகர்வோருக்கும் கொடுக்கும் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும்.
(முன்பு ஏப்ரல் 5ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 7.14% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டு அரசு அறிவித்தது. இது இறுதி கணக்கீட்டின் படி 7.71 விழுக்காடாக அதிகரித்துள்ளது).