பருத்தி நூல், பட்டு நூல் விலை உயர்வை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சிட்டா ரக நூல் உட்பட பல்வேறு ரக நூல்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை ஈடுசெய்ய முடியாமல் கைத்தறி, விசைத்தறி பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, ஏற்கனவே கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விசைத்தறி, கைத்தறி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. அதே போல் தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி, கைத்தறி உரிமையாளர்களும் வேலை நிறுத்தித்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தி விலை உயர்வு, மின் கட்டணம் அதிகரித்துள்ளதால். நூல் விலை உயர்ந்திருப்பதாக நூற்பாலைகள் கூறிவருகின்றன.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் கருணாநிதி நூல் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் திருச்சியில் நடந்த தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக் குழு, பருத்தி நூல், பட்டு நூல் விலை உயர்வை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தில், நூல் விலை உயர்வால் கைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல கைத்தறி உற்பத்தி கூடங்கள் மூடப்பட்டு விட்டது.இதனால் ஆயிரக்கணக்கான கைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பொதுக் குழுவில், கூட்டுறவு கைத்தறி சொசைட்டி நெசவாளர்களுக்கு பத்து விழுக்காடு ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்காமல், ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தற்போது கூட்டுறவு கைத்தறி நெசவாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.400 வழங்கப்படுகிறது. இதை ஆயிரம் ரூபாயாக உயர்த்த் வேண்டும்.
நெசவாளர் குடும்பத்தினருக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உதவி போன்றவை தாமதம் இல்லாமல் கிடைக்க, மாநில அரசு நெசவாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் கூட்டுறவு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த எல்லா நெசவாளர்களுக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.