தொழில் நிறவனங்களுக்கு வரி சலுகையை நீடிக்க மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் துவக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கும் வருமான வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, உற்பத்தி வரி போன்ற வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் குறிப்பிட்ட வருடங்களுக்கு வழங்கபபடுகிறது.
முன்பு துவக்கப்பட்ட ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வருமானவரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை 2010 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு, உள்நாட்டு பணவீக்கம், உற்பத்தி செலவு உயர்வு போன்ற காரணங்களினால், வரி சலுகை பெற்றுள்ள நிறுவனங்கள், இந்த சலுகையை மேலும் நீடிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றன.
மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே தகவல் தொழில் நுடப பூங்காக்களில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு வருமான வரி சலுகையை 2010 ஆம் ஆண்டுவரை நீடித்துள்ளது.
ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் 2010 மார்ச் 31 ந் தேதிக்கு முன்பு தொடங்கப்படும் புதிய தொழில்களுக்கு நிறுவன வரி, உற்பத்தி வரி சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று செய்தியாளர்களுடன் பேசுகையில், அரசு அறிவித்த காலக்கெடுவில், வரி விலக்கு முடிவுக்கு வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். அரசுக்கு வரி வருவாய் குறைந்து வருகிறது. குறிப்பிட்ட தொழில்களுக்கு வரி சலுகை அளிக்கபடுகிறது. இதனால் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றார் போல், வரி வருவாய் உயரவில்லை. உதாரணமாக உணவு பதப்படுத்தும் தொழில்கள் அதிக அளவு வளர்ச்சி அடைந்துள்ளன. இவைகளுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதால், இதன் வளர்ச்சிக்கு ஏற்றார் போல், அரசுக்கு உற்பத்தி வரி வருவாய் அதிகரிக்கவில்லை.
குட்கா நிறுவனங்களுக்கு, அவற்றின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. இதே மாதிரி மற்ற தொழில்களுக்கு உற்பத்தி வரி விதிக்க முடியாது என்று சிதம்பரம் கூறினார்.
இந்த வருடம் நிதி அமைச்சர் சிதம்பரம் சமர்ப்பித்த பட்ஜெட்டில் உள்ள தகவல் படி, சென்ற நிதி ஆண்டில் (2007-08) அரசு அறிவித்த வரி சலுகைகளால் அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளால் ரூ.12,000 கோடி, ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், வடகிழக்கு மாநிலங்களில் அமைந்த தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய சலுகைகளால் ரூ.3 ஆயிரம் கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.