உற்பத்தி வரி விதிகளை மாற்ற வேண்டும்– வ.கி. மாநிலங்கள்!
புதன், 14 மே 2008 (20:03 IST)
வடகிழக்கு தொழில் முதலீட்டு வளர்ச்சி கொள்கையில் உள்ள உற்பத்தி வரி விதிகளை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை, வடகிழக்கு மாநிலங்களின் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாசல பிரதேசம், மேகலாயா, மிஜோரம், சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசு வடகிழக்கு தொழில் முதலீட்டு மேம்பாட்டு கொள்கையை அறிவித்துள்ளது.
இந்த பிராந்திய வளர்ச்சிக்காக மத்திய அரசு வடகிழக்கு மாநில குழுவை அமைத்துள்ளது. இதற்கு தலைவராக வடகிழக்கு பிராந்திய துறையின் மத்திய அமைச்சரான மணி சங்கர் அய்யர் உள்ளார். இதன் உறுப்பினர்களாக மாநில முதல்வர்கள் உள்ளனர்.
இந்த குழுவின் 56 வது கூட்டம் அகர்தலாவில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு தொழில் முதலீட்டு மேம்பாட்டு கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தி வரி தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த குழுவின் உயரதிகாரி கூறுகையில், இப்போதுள்ள மத்திய உற்பத்தி வரி விதிகள், இந்த பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சிக்கான முதலீட்டை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே மத்திய அரசு, உற்பத்தி வரியில் மாற்றம் செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.
இப்போதுள்ள விதிமுறைகள், வடகிழக்கு தொழில் முதலீட்டு வளர்ச்சி கொள்கையின் நோக்கத்திற்கு நேர் எதிராக உள்ளது. எனவே உடனடியாக புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்று வடகிழக்கு மாநில முதல்வர்கள் சுட்டிக்காட்டினார்கள் என்று தெரிவித்தார்.
முன்னதாக மே 7 ஆம் தேதி நடந்த குழு வடகிழக்கு மாநில தொழில் முதலீட்டு மேம்பாட்டு குழுவின் உயர்நிலை கமிட்டி கூட்டத்திலும், தற்போதுள்ள அரசாணை பற்றியும், இதன் பாதகமான அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கமிட்டி தற்போதுள்ள உற்பத்தி வரி பற்றிய விதிமுறைகள் முதலீட்டு வாப்ப்புகளை சீர்குலைப்பதுடன், உள்ளூரில் கிடைக்கும் கச்சாப் பொருட்களை பயன்படுத்துவதை பாதிப்பதாக உள்ளது என்று கூறியது.
அத்துடன் முதலீட்டு மேம்பாட்டு கொள்கையின் நோக்கமே, உள்ளுரில் கிடைக்கும் கச்சாப் பொருட்களை பயன்படுத்தி தொழில் துவங்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த உற்பத்தி வரி பற்றிய அரசாணை இந்த நோக்கத்தை சிதைத்து, தொழில் நிறுவனங்களுக்கு திருப்பி கொடுக்கும் உற்பத்தி வரியின் அளவை குறைப்பதாக இருப்பதுடன், சிறு தொழில் பிரிவில் உள்ள தொழிற்சாலைகளின் முன்னுரிமையை இழப்பதாகவும் உள்ளது என சுட்டிக்காட்டியது.