மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை எடுத்து வரும் நடவடிக்கையாலும், போதிய அளவு பருவமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாலும் அடுத்த நான்கு மாதங்களில் பணவீக்க விகிதம் 5 முதல் 5.5 விழுக்காடாக குறைய வாய்ப்பு உள்ளது என்று பிரமரின் பொருளாதார ஆய்வுக் குழு தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி.ரெங்கராஜன் தெரிவித்தார்.
புது டெல்லியில் சர்வதேச வரி பற்றிய கருத்தரங்கு நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்ள வந்த ரெங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் பணவீக்கம் 6 விழுக்காடாக குறையும். அதற்கு பிறகு பருவமழையின் அளவு, மற்ற துறைகளின் வளர்ச்சி பொறுத்து பணவீக்க விகிதம் 5 முதல் 5.5 விழுக்காடாக குறையும்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள பொருளாதார நடவடிக்கைகளால் மட்டுமே பணவீக்கம் குறையாது, அத்துடன் மற்ற காரணங்களும் தேவை.
சென்ற வருடம் எடுத்த நடவடிக்கைகளால், இதே நேரத்தில் பணவீக்கம் சிறிது சிறிதாக அதிகரித்தது என கருதப்பட்டது. இந்த கருத்துக்கள் எல்லாம் தலைகீழாக மாறி விட்டன.
பருவமழையின் அளவை பொறுத்தே, மற்ற வளர்ச்சிகள் இருக்கும். இது சரியாக இருந்தால் பணவீக்கம் 5 முதல் 5.5 விழுக்காடாக குறைய வாய்ப்பு உள்ளது. இப்போதுள்ள நிலவரப்படி பருவமழை போதிய அளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறினார்.
அவர் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கையால், வரி வருவாயின் மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தை பற்றி கூறுகையில், பொருளாதார நடவடிக்கைகளால் சில பலன்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை மிகுந்த கவனத்துடன் செய்யவேண்டும் என்று கருதுகின்றேன். பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 120 டாலரை தாண்டிவிட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி சிறிது குறையும். இது வளர்ச்சிக்கு தடையாக இருக்காது என்று ரெங்கராஜன் கூறினார்.