வெளியீட்டு விலையை விட விலை குறைந்த பங்குகள்!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (18:09 IST)
பொது பங்கு வெளியீட்டின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, இந்த பங்குளின் விலைகள் தற்போது சரிந்துள்ளன.

பொது பங்கு வெளியிடும் நிறுவனங்கள் 1 பங்குக்கு குறைந்த பட்ச விலை அதிகபட்ச விலையை அறிவித்து வெளியிடுகின்றன.

இதில் விண்ணப்பம் செலுத்துபவர்களுக்கு சராசரி விலையில் அல்லது குறிப்பிட்ட விலையில் பங்குகள் ஒதுக்கப்படுகின்றன.

பங்குகள் ஒதுக்கப்பட்ட விலையை விட, இதன் விலைகள் குறைந்து விட்டது என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை கேள்விக்கு எழுத்து‌ப் பூர்வமாக பதிலளித்த நிதித்துறையின் இணை அமைச்சர் பவன் குமார் பன்சால் பதிலளிக்கும் போது, கடந்த இரண்டு வருடங்களில் வெளியிடப்பட்ட பங்குளின் விலை, தற்போது மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் குறைந்து விட்டது.
இதன் விலைகள் பங்கு ஒதுக்கீட்டு விலையைவிட குறைந்து விட்டன. இவற்றில் 33 விழுக்காடு பங்குகளின் விலைகள் 40 முதல் 60 விழுக்காடு வரை குறைந்து விட்டன.

2006 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2008 மார்ச் 31ஆம் தேதி வரை மும்பை பங்குச் சந்தையில் 150 பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 86 பங்குகளின் விலை, அதன் வெளியீட்டு விலையைவிட குறைந்து விட்டது

இதே கால கட்டத்தில் தேசிய பங்குச் சந்தையில் 162 பங்குகள் பட்டியலிடப்பட்டன. இதில் 88 பங்குளின் விலை, அதன் வெளியீட்டு விலையை விட குறைந்து விட்டன. 38 பங்குகளின் விலை, அதன் வெளியீட்டு விலையைவிட 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்து உள்ளது என்று பன்சால் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது பன்சால், பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அதிகாரிகள் பங்குகளின் விலையை நிர்ணயிப்பதில்லை. அதன் விலை உயர்வையும், சரிவையும் கட்டுப்படுத்துவதில்லை. பங்குச் சந்தையின் போக்கில் விலைகளின் ஏற்ற இறக்கம் இருக்கும். தற்போது கடைப்பிடிக்கும் முறையில் பொது பஙகுகளின் வெளியீட்டு விலை, விண்ணப்பங்களின் குறிப்பிடப்படும் விலையின் (புக் பில்டிங்) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பங்குச் சந்தையில் பங்கேற்கும் முதலீட்டாளர்களுக்கு அதிகாரிகள் எல்லா தகவல்களையும் கொடுக்க முயல்கின்றனர் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்