வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை அதிகரிக்க மாநிலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் மத்திய விற்பனை வரி 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட உள்ளது. விற்பனை வரிக்கு பதிலாக, மதிப்பு கூட்டு வரி அமல் படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது மத்திய விற்பனை வரி 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
இந்நிலையில் மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரி உயர்த்துவதன் மூலம், அவற்றின் வருவாய் அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு வழங்கும் இழப்பீடு குறையும் என்பதற்காக மத்திய நிதி அமைச்சகம், மதிப்பு கூட்டு வரி உயர்குழுவிடம் வரியை உயர்த்துமாறு கூறியது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் புது டெல்லியில் நேற்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மதிப்பு கூட்டு வரி உயர்நிலை குழு தலைவரும், மேற்கு வங்க நிதி அமைச்சருமான அசிம்தாஸ் குப்தா இடையே நடந்தது.
இதற்கு பின் அசிம்தாஸ் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது, தற்போது மதிப்பு கூட்டு வரியை 4 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக அதிகரிக்க அவசியம் இல்லை. தற்போது மத்திய விற்பனை வரி 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கி வரும் இழப்பீட்டு தொகையை, குறைத்துக் கொள்வது பற்றி முடிவு எட்டப்படும்.
மத்திய விற்பனை வரியை 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கும் உத்தரவு விரைவில் வெளியிடப்படும். இது முன்தேதியிட்டு அமல்படுத்தப்படாது. வாட் உயர் மட்ட குழு வரும் 16 ந் தேதி அன்று கூடி, மத்திய விற்பனை வரி குறைப்பு பற்றி ஆலோசனை நடத்தும்.
மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க கணக்கிடப்படுவது மேம்படுத்தப்படும். உயர் மட்ட குழு நினைப்பது போல் மாற்றப்படும். மாநிலங்களுக்கு அதிக அளவு வருவாய் இல்லை என்று தெரிகிறது என்று கூறிய அஜிம்தாஸ் குப்தா, இது பற்றி விரிவாக விளக்க மறுத்து விட்டார்.