ஆலிவ் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு!

திங்கள், 7 ஏப்ரல் 2008 (12:41 IST)
ஆலிவ் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பை வர்த்தகர்கள் வரவேற்றுள்ளனர்.

மத்திய அரசு சென்ற வாரம் பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய் உட்பட பல்வேறு சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைத்தது. இதே போல் ஆலிவ் எண்ணெய் இறக்குமதி வரியை 7.5 விழுக்காடாக குறைத்தது. இதற்கு முன்பு சுத்திகரிக்கப்படாத ஆலிவ் எண்ணெய்க்கு 45 விழுக்காடும், சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்க்கு 40 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.

மத்திய அரசு வரி குறைத்திருப்பதை இந்தியன் ஆலிவ் அசோசிசன் எனப்படும் இறக்குமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இதன் தலைவர் வி.என்.டால்மியா சென்னையில் கூறியதாவது:

தற்போதைய வரி குறைப்பினால், அடுத்த சில மாதங்களில் இதன் விலை 15 விழுக்காடு வரை குறையும். நாங்கள் ஆலிவ் எண்ணெயின் முக்கியத்துவத்தை பற்றி வலியுறுத்தி வருகின்றோம். தற்போது எங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய்க்கு இறக்குமதி வரி அதிக அளவில் இருப்பதால், இதன் விலையும் அதிகமாக இருக்கின்றது. இதை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்ற கருத்து நிலவியது.

ஆனால் ஆலிவ் எண்ணெய் பணக்காரர்களுக்கு மட்டும் உரியது அல்ல. உடல் நலத்தை பாதுகாப்பவர்களுக்கு தேவையான உணவு எண்ணெய். இதன் விலை தற்போது குறைய வாய்ப்பு இருப்பதால், இதனை பயன்படுத்துவதும் அதிகரிக்கும்.

இந்தியாவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது அதிகரிக்கும். சென்ற வருடம் 2,300 டன் இறக்குமதி செய்யப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களில் இறக்குமதி 25 ஆயிரம் டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று டால்மியா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்