சாமானிய மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நிதி அமைச்சரிடம் கோரினர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம முழு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வது இதுவே கடைசி தடவையாக இருக்கும்.
எனவே முந்தைய நிதி நிலை அறிக்கை போல் இல்லாமல், இதில் சாமானிய மக்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கும் சலுகை, பயன் வழங்க கூடிய வகையில் நிதி ஒதுக்கீடு, அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல்வேறு பிரிவினரிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முந்தைய நிதி நிலை அறிக்கைகள் பணக்காரர்களுக்கும், மேல் தட்டு மக்களுக்குமான பட்ஜெட் என்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த குஜராத், இமாசலப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு முன் உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இவை எல்லாம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஒரு வித சோர்வை உண்டாக்கி உள்ளது.
இந்த நிதி நிலை அறிக்கையும் ஏழைகளுக்கு எதிரானது என்ற விமர்சனம் எழுந்தால், அடுத்து வரும் தேர்தலுக்கு மக்களிடம் வாக்கு சேகரிப்பது மிகுந்த சிரமாமானதாகி விடும் என்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.
நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு, அந்நிய மூலதனம் குவிகின்றது என்று வளர்ச்சி பற்றி பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறினாலும், மக்களின் அன்றாட தேவையான உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏழைகள் மட்டுமல்லாது நடுத்தர வருவாய் பிரிவினரும் கடுமையான பொருளாதார சுமையால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த முடியவில்லை. கிராமப்புற ஏழை மக்கள் தினசரி ரூ.20 கூட வருவாய் இல்லாமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிப்பது அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்தே தெரியவந்துள்ளது.
இவை எல்லாம் காங்கிரஸ் கட்சி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கும், அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் இடது சாரி கட்சிகளுக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்நது வருகிறது.
இந்நிலையில் இந்த மாதம் பிப்ரவரி 29 ந் தேதி நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நிதி நிலையை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகின்றார்.
நேற்று புது டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு மத்திய அமைச்சர்கள் கட்சியின் பொதுச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 38 உயர்மட்ட தலைவர்கள ப.சிதம்பரத்தை சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 150 நிமிடங்கள் நீடித்ததாக தெரிகிறது.
அப்போது அவர்கள் நிதி அமைச்சரிடம், சாதாரண மக்களுக்கு பயன் தரக்கூடிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். இந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
அவர்கள் மேலும், குறைந்த வட்டியில் வீட்டு கடன் வழங்க வேண்டும். வருமான வரி உச்சவரதம்பை அதிகரிக்க வேண்டும். பெட்ரோலிய விலை உயர்வை சாதாரண மக்களால் தாங்க முடியாது.
நிதி நிலை அறிக்கையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், பெண்களுக்கு ஆகியோருக்கு பயனளிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றுவதை சிறப்பான முறையில் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
விவசாயிகளின் கடன் சுமையை கருத்தில் கொண்டு சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். தற்போது 7 விழுக்காடு வட்டியில் விவசாய கடனுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுடன் கூடுதலாக பருவகால இழப்பீடு காப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த சந்திப்பு பற்றி காங்கிரஸ் ஊடக பிரிவு சேர்மன் எம். வீரப்ப மொய்லி செய்தியாளரிகளிடம் கூறியதாவது. எங்கள் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டங்கள் கீழ் மட்ட அளவில் சரியாக செயல் படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார்.