பெருவாரியான மக்களின் பொருளாதார நிலை கீழ்மட்டத்தில் உள்ளது. அரசின் பொருளாதார கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறினார்.
புதுடெல்லியில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 60 வது நினைவு நாளில் மணிசங்கர் அய்யர் பேசினார். அப்போது அவர் அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக சாடியதுடன், பெருவாரியான மக்களின் பொருளாதார நிலை தாழ்ந்து உள்ளது. இதற்கு தீர்வுகாண அரசின் பொருளாதார கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், பொருளாதார வளர்ச்சி அபரிதமாக உள்ளது என்று கூறிக் கொள்ளும் அதே நேரத்தில், பெருவாரியான மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்த பட்ச அளவில் கூட இல்லை.
இந்தியா அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் உருவாக்கி வருவதில் முன்னண்யில் உள்ளது, அல்லது பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று கூறுகின்றோம். ஆனால் சாதாரண மக்களின் நிலை என்ன? ஐ.நா சபையின் மனித மேம்பாட்டு அட்டவணையில் நாம் 128 வது இடத்தில் இருக்கின்றோம்.
நாம் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுக்கும் போது, ஏழை மக்களை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். நாட்டின் 83.60 லட்சம் மக்களின் வருவாய், சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.20 செலவழிக்க கூடிய நிலையிலேயே உள்ளது. இதில் 23.90 லட்சம் பேர் ஒரு நாளைக்கு ரூ.9 மட்டுமே செலவழிக்க கூடிய நிலையில் உள்ளனர்.
இது பெருவாரியான மக்களின் பொருளாதார நிலையை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது. இது பெரும் ஏமாற்றத்தை தரக்கூடியதாகவும் உள்ளது.
மகாத்மா காந்தி கூறியது போல் விவசாய துறைக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. மகாத்மா காந்தியின் எதிர்பார்ப்பில் இருந்து நாம் விலகிச் செல்லக் கூடாது என்று கூறினார்.