இந்தியர்களின் தனிநபர் வருமானம் 2025 ஆண்டில் சராசரியாக 4000 அமெரிக்க டாலராக இருக்கும் (இன்றைய டாலர் மதிப்பு நிலவரப்படி ரூ. 1,57,200) என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
மும்பையில் ராமா பிஜாபுர்கர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்திய நுகர்வோரின் மன நிலையை புரிந்து கொள்வோம் என்ற புத்தகத்தை வெளியிட்டு சிதம்பரம் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது :
இந்தியர்களின் தனிநபர் வருமானம் 2025 ஆண்டில் சராசரியாக 4000 அமெரிக்க டாலராக இருக்கும். ( இன்றைய டாலர் மதிப்பு நிலவரப்படி ரூ. 1,57,200).
இந்தியர்களின் தனிநபர் வருமானம் 2010 ஆம் ஆண்டில் 800 டாலராகவும், 2015 ஆம் ஆண்டில் 1,149 டாலராகவும் இருக்கும் என்று பி.ஆர்.ஐ.சி அமைப்பு கணித்துள்ளது. ஆனால் ஏற்கனவே இந்த ஆண்டு இந்தியர்களின் தனி நபர் வருமானம் 1,000 டாலரை தொட்டுவிட்டது. 2025 ஆம் ஆண்டில் 4,000 டாலராக உயர்ந்து விடும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இன்றைய நிலையில் விவசாய தொழிலாளர்கள் தினசரி கூலியாக ரூ. 80க்கும், தச்சர் ரூ. 150 க்கும், கொத்தனார் ரூ. 200 க்கும் குறைந்து கிடைக்க மாட்டார்கள். அவர்கள் அதிக கூலி கேட்டு வாங்குகின்றனர். இந்த எதிர்பார்ப்பினால் இந்தியா அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் நடுத்தர வருவாய் உள்ள நாடாக மாறும் வளரும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் செல் போன்களின் வளர்ச்சி பற்றி முன்பு கூறப்பட்ட மதிப்பீடு தவறானது என்பதை நுகர்வோர்கள் நிருபித்துள்ளனர்.
இந்தியாவில் 200 மில்லியன் ( 1 மில்லியன் - 10 லட்சம் ). செல்போன்கள், இரண்டு மடங்காக வளர்வது மிகுந்த சிரமம் என்று கூறப்பட்டது. இந்த மதிப்பீடு தவிடுபொடியாகி விட்டது. இந்தியாவில் வருடத்திற்கு புதிதாக 60 மில்லியன் செல் போன்கள் உபயோகத்தில் வருகின்றன. இந்திய மக்களின் எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் வேகமாக மாறி வருகின்றது. மக்களி வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்று நினைக்கின்றனர் என்று சிதம்பரம் கூறினார்.