பணவீக்கம் செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3.23 விழுக்காடு குறைந்துள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி பணவீக்கம் 3.32 விழுக்காடாக இருந்தது.
சென்ற வாரம் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம்., பழங்கள், காய்கறிகள், நவதானியங்கள், பால் மற்றும் சில தயாரிப்புப் பொருட்களின் விலைகள் குறைந்ததே,
சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.27 விழுக்காடாக இருந்தது.
ரிசர்வ் வங்கி, இந்த நிதியாண்டில் பணவீக்கம் 5 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிட்டது. ஆனால் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, 15வது வாரமாக பணவீக்கம் 4 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் இரண்டாவது அரை வருடத்திற்கு, ரிசர்வ் வங்கி அறிவிக்க இருக்கும் பொருளாதார கொள்கையில் கடுமையான நடவடிக்கைகள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற வாரத்தில் தேங்காய் எண்ணெய் விலை 4 விழுக்காடு குறைந்தது. துத்தநாகத்தின் விலை 10 விழுக்காடுகள் குறைந்தது. இதே போல் அலுமினிய கட்டி, மற்ற அலுமினியப் பொருட்களின் விலைகளும் குறைந்தன.
அதே நேரத்தில் சிமென்ட் விலை 0.2 விழுக்காடு அதிகரித்தது.