நான்கு வகை சேவை வரி திருப்பி அளிப்பு!

Webdunia

திங்கள், 17 செப்டம்பர் 2007 (16:17 IST)
ஏற்றுமதியாளர்களுக்கு நான்கு வகையான சேவை வரிகளை திருப்பி வழங்குவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது!

கப்பல், விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும் வசூலிக்கப்படும் 4 வகை சேவை வரிகளை ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பியளிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நிதி சட்டத்தின்,

a) ஏற்றுமதிக்கான துறைமுக சேவை வரி, பிரிவு ( 65 (105) zn )

b) ஏற்றுமதிக்கு மற்ற வகை துறைமுக சேவைக்கான சேவை வரி, பிரிவு ( 65 (105) zz )

c) பெட்டக (கண்டைய்னர் ) மையத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் போக்குவரத்து கட்டணத்திற்கு வசூலிக்கும் சேவை வரி, பிரிவு ( 65 (105)zzp ),

d) பெட்டக மையத்தில் இருந்து பெட்டகங்கள் மூலம் பொருட்களை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்ல வசூலிக்கப்படும் சேவை வரி, பிரிவு ( 65 (105) zzzp ) ஆகியவற்றிற்கு வசூலிக்கப்பட்ட சேவை வரி ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.

ஏற்றுமதி பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு தேவையான மின்சாரம் போன்றவைகளுக்கு செலுத்திய சேவை வரி ஏற்கனவே உள்ள திட்டத்தின் படி திருப்பி வழங்கப்படுகிறது.

அரசு ஏற்றுமதியாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, ஏற்றுமதி தொடர்பான எந்தெந்த சேவைக்கு, செலுத்திய சேவை வரியை திரும்ப வழங்குவது என முடிவு செய்ததாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்