சென்செக்ஸ் 324 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

வியாழன், 15 ஜனவரி 2009 (18:50 IST)
பங்குச்சந்தை குறியீடு- சென்செக்ஸ் இன்றைய சந்தை நிறைவின் போது 324 புள்ளிகள் சரிந்து 9,046 ஆக நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு- நிஃப்டி 99 புள்ளிகள் குறைந்து 2,737 ஆக இருந்தது.

இன்று வர்த்தகம் துவங்கிய போது சுமார் 400 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் குறியீடு, தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே பயணித்தது. எனினும் சந்தை நிறைவுக்கு சற்று முன்னர் பங்குகள் விற்பனை ஓரளவு சூடுபிடித்ததால் 324 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று விற்பனை செய்யப்பட்ட 2,447 நிறுவனப் பங்குகளில், 1,649 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. 698 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 100 பங்குகள் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.

ஜீ குழுமம், க்ளென்மார்க் பார்மஸி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் குறிப்பிடத்தக்க உயர்வை சந்தித்துள்ளன. எனினும் கோட்டக் மஹிந்திரா வங்கிப் பங்குகள் 9.35% சரிந்து ரூ.306.50 ஆகவும், யுனிடெக் நிறுவனப் பங்குகள் 9% சரிந்து 31.85 ஆகவும், பேன்டலூன் ரீடெல் நிறுவனப் பங்குகள் 8.99% சரிந்து ரூ.172.65 ஆகவும் விலை குறைந்தன.

நிதிக் கணக்குகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சிக்கலில் தவித்து வரும் சத்யம் நிறுவனத்திற்கு எந்தவித நிதியுதவியும் அளிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் விலை 32.22% சரிந்து ரூ.20.30 ஆக நிறைவடைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்