போர் பீதி: சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (18:14 IST)
மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்றைய சந்தை நிறைவடையும் போது 240 புள்ளிகள் சரிந்து 9,329 ஆக நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை-நிஃப்டி குறியீடு 59 புள்ளிகள் சரிந்து 2,857 ஆக இருந்தது.
வர்த்தகம் துவங்கிய போது 70 புள்ளிகள் உயர்ந்து 9,639 ஆக பயணத்தை துவக்கிய சென்செக்ஸ் குறியீடு, நண்பகல் அளவில் அதிகபட்சமாக 9,706 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் வாய்ப்புகள் வலுவடைந்ததால், பங்குச்சந்தை சரியத் துவங்கியது.
பிற்பகலில் படிப்படியாக சரிந்த சந்தை, நிறைவிற்கு முன்பாக 9,295 புள்ளிகள் வரை சரிந்து, பின்னர் சற்றே உயர்ந்து 9,329 ஆக நிலைப்பெற்றது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று விற்கப்பட்ட 2,532 நிறுவனப் பங்குகளில், 1,598 நிறுவனங்கள் விலை சரிந்துள்ளன. 865 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 69 நிறுவனப் பங்குகள் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.
கட்டமைப்புத் துறையில் உள்ள டி.எல்.எஃப் நிறுவனப் பங்குகள் 6% சரிந்து ரூ.276 ஆகவும், இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனப் பங்குகள் 5% சரிந்து முறையே ரூ.1,110 மற்றும் ரூ.418 ஆகவும், பெல் பங்குகள் 4% சரிந்து ரூ.1,300 ஆகவும் இருந்தன.
இதேபோல் எஸ்.பி.ஐ, ஸ்டெர்லைட், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க விலை சரிவை சந்தித்துள்ளன.
கிராஸிம், மாருதி ஆகிய நிறுவனப் பங்குகள் 1.7% அதிகரித்து முறையே ரூ.1,205 மற்றும் ரூ.511 ஆகவும் உயர்ந்தன. ரான்பாக்ஸி பங்குகள் 1% உயர்ந்து ரூ.219 ஆக காணப்பட்டது.