பங்குச் சந்தை சரிவு!

வியாழன், 20 நவம்பர் 2008 (12:02 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே கடும் சரிவை சந்தித்தன.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் கடும் வீழ்ச்சி அடைந்தன. அமெரிக்கா மற்றும் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறியீட்டு எண்கள் குறைந்தன.

பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடியால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிதி ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று அமெரிக்க சந்தையில் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 53.62 டாலராக குறைந்தது. இது கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவு.

இதன் பாதிப்பு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது. மற்ற நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவால், இந்தியாவின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை விற்பனை செய்வார்கள் என்பதால், அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.

இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு நேற்று ரூ. 50.01 பைசாவாக அதிகரித்தது. நேற்று மட்டும் ரூபாயின் மதிப்பு 34 பைசா குறைந்தது.

இன்று காலையில் அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போதே 1 டாலரின் மதிப்பு ரூ.50.44 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட, 43 பைசா உயர்வு.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசா குறைந்தது.

இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.05 மணியளவில் நிஃப்டி 89.25, செ‌ன்செ‌க்‌ஸ் 292 புள்ளிகள் சரிந்தன.

அமெரிக்க பங்குச் சந்தை நேற்று, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. டோவ் ஜோன்ஸ் 427.47, நாஸ்டாக் 96.85, எஸ் அண்ட் பி 500-52.54 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-202.87 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 110.50 (4.19%) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2635.00 ஆக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 385.63 (4.40%) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 8,388.15 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 108.47, சுமால் கேப் 111.25, பி.எஸ்.இ. 500- 134.79 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாடுகளில் இன்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன.

ஹாங்காங்கினஹாங்செங் 681.37, ஜப்பானின் நிக்கி 428.71, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 60.95, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 55.33, சீனாவின் சாங்காய் காம்போசிட் 24.27 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.36 மணியளவில் 262 பங்குகளின் விலை அதிகரித்தும், 1436 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 36 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 264.98, கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.195.71 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்