பங்குச் சந்தைகளில் தொடர் உயர்வு!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (17:12 IST)
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை குறியீடுகளில், செவ்வாய்க்கிழமை சந்தை நிறைவடைந்த போது, இரண்டாவது நாளாக குறிப்பிடத்தக்க அளவு உயர்வு காணப்பட்டது.

பிஎஸ்இ குறியீடு இன்று வர்த்தகம் முடிவடைந்த போது, 460.30 புள்ளிகள் உயர்ந்து 10,683.39 ஆக நிறைவடைந்தது. இது நேற்றைய தினத்தைக் காட்டிலும் 4.5 விழுக்காடு அதிகமாகும்.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்குகள் 16 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து, ஒரு பங்கு விலை 79 ரூபாயாக அதிகரித்தது. டிசிஎஸ் பங்குகள் 13 விழுக்காடு அளவுக்கு உயர்வை எதிர்கொண்டு 561 ரூபாயாகவும் இருந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 11 விழுக்காடு உயர்ந்து 258 ரூபாயாகவும், டாடா ஸ்டீல் மற்றும் சத்யம் தலா 10 விழுக்காடு உயர்ந்து முறையே ரூ. 278, ரூ. 317 ஆகவும் இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் போது ஆயிரத்து 613 பங்குகள் உயர்வை எதிர்கொண்டன. 975 நிறுவனங்களின் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

இதேபோல் தேசியப் பங்குச் சந்தை - நிஃப்டி இன்று மாலை சந்தை நிறைவடைந்த போது, 112 புள்ளிகள் உயர்ந்து 3234.90 ஆக இருந்தது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பிஎஸ்இ, நிஃப்டி குறியீடு இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்வை நோக்கிச் சென்று வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்