பங்குச் சந்தைகளில் சரிவு!

புதன், 1 அக்டோபர் 2008 (10:51 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே குறைய ஆரம்பித்தன.

அமெரிக்காவில் நஷ்டமடைந்த நிதி, முதலீடு, வங்கிகளுக்கு நிதி உதவி செய்யும் புஷ் நிர்வாகத்தின் 700 பில்லியன் டாலர் மசோதா, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம்.

இதன் திருத்தி அமைக்கப்பட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர்.

இதனால் நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. டோவ்ஜோன்ஸ் 485.21, நாஸ்டாக் 98.60, எஸ் அண்ட் பி 500- 59.97 புள்ளி அதிகரித்தது.

ஐரோப்பாவிலும் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவியது. இத்தாலி தவிர எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-83.68 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.33 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 53.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3867.60 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 148.06 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 12,712.37 சரிந்தது.

இதே போல் மிட் கேப் 30.20, சுமால் கேப் 01.08 பி.எஸ்.இ. 500- 49.72 புள்ளிகள் குறைந்தன.

ஆனால் இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் இரு விதமான நிலையே நிலவியது.

ஹாங்காங்கினஹாங்செங் 135.53, ஜப்பானின் நிக்கி 104.86, சீனாவின் 180 பிரிவு- 22.92 புள்ளி அதிகரித்தது.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 02.43, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 09.72, புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.34 மணியளவில் 767 பங்குகளின் விலை அதிகரித்தும், 930 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 49 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று அதிக அளவு பங்குகளை வாங்கியுள்ளன. அதே நேரத்தில் விற்பனையும் செய்தன. இவை 14.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 394.11 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

காலை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி, பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது. தகவல் தொழில் நுட்பம் அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் நண்பகலுக்கு பிறகு அதிக அளவு பங்குகளை வாங்கியுள்ளனர். இவர்கள் இன்று விற்பனை செய்வார்கள். காலையில் பங்குச் சந்தை சரிவை சந்தித்தாலும், வர்த்தகம் அதிக அளவு நடக்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகமாக விற்பனை செய்தால் பங்குச் சந்தையில் பாதகமான நிலை நிலவும்.

அதே நேரத்தில் அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவாக 1 டாலரின் மதிப்பு ரூ.47.22 என்று இருந்தது. இது திங்கட் கிழமையுடன் ஒப்பிடுகையில் 55 பைசா சரிவு.

வெப்துனியாவைப் படிக்கவும்