பணவீக்கம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவியது. இது 12.23 விழுக்காடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முந்தைய வாரத்தின் அளவே இருப்பதாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.14 விழுக்காடாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று சாதகமான நிலை இருந்தாலும், இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சரிவை சந்தித்தன.
அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகளின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும், இவற்றின் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு புஷ் நிர்வாகம் 700 பில்லியன் டாலர் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பிரச்சனையில் அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால் முதலீட்டு நிறுவனங்கள் முடிவு எடுக்க முடியாமல் உள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளில் அக்டோபர் மாதத்திற்கு முன்பேர வர்த்தகத்தின் ஒப்பந்தங்களில் குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன. ஆனால் இதன் பிரதிபலிப்பு தினசரி வர்த்தக சந்தையில் தெரியவில்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதால் தொடர்ந்து சரிவு ஏற்படுகிறது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, சென்செக்ஸ் 60 புள்ளியும், நிஃப்டி 60 புள்ளியும் குறைந்தது.
காலை 10.35 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 61.75 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4048.80 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 188.63 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,358.55 ஆக சரிந்தது.
இதே போல் மிட் கேப் 42.80, சுமால் கேப் 15.52, பி.எஸ்.இ. 500- 63.96 புள்ளிகள் குறைந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. டோவ்ஜோன்ஸ் 196.89, எஸ் அண்ட் பி 500- 23.31, நாஸ்டாக் 30.89 புள்ளிகள் அதிகரித்தது.
இதே போல் ஐரோப்பாவில் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ-100-101.45 புள்ளிகள் உயர்ந்தது.
ஆனால் இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் பிலிப்பைன்ஸ் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன.
ஹாங்காங்கின் ஹாங்செங் 383.14, சீனாவின் சாங்காய் 180 பிரிவு 47.42, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 40.55, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 29.72, ஜப்பானின் நிக்கி 197.88 புள்ளிகள் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.53 மணியளவில் 652 பங்குகளின் விலை அதிகரித்தும், 1197 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 69 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,050.38 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 605.59 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
காலை வர்த்தகத்தில் தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள் உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் சரிந்தன. நண்பகலுக்கு பிறகு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.