சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (16:46 IST)
மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்றைய சந்தை நிறைவின் போது 49 புள்ளிகள் உயர்ந்து 14,450 ஆக நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை- நிஃப்டி குறியீடு 8 புள்ளி அதிகரித்து 4,335 ஆக உயர்ந்தது.

பங்கு வர்த்தகம் துவங்கிய போது 242 புள்ளிகள் உயர்ந்து 14,643 ஆக இருந்த சென்செக்ஸ் குறியீடு, அதிகபட்சமாக 14,673 புள்ளிகள் வரை சென்றது. எனினும் மதியத்திற்கு பின் சரியத் துவங்கிய சென்செக்ஸ், சந்தை நிறைவின் போது 14,450 ஆக நிலைப்பெற்றது.

பிஎஸ்இ ரியல்டி (BSE Realty) குறியீடு 2% உயர்ந்து 5,044 புள்ளிகளாகவும், பேங்கெக்ஸ் (Bankex) குறியீடு 1.3% அதிகரித்து 6,746 புள்ளிகளாகவும் இருந்தது. மும்பை பங்குச்சந்தையில் இன்று விற்கப்பட்ட 2,722 நிறுவனப் பங்குகளில் 1,347 நிறுவனங்கள் விலை உயர்ந்துள்ளன. 1,287 நிறுவனப் பங்குகள் விலை சரிவை சந்தித்துள்ளன.

ஹெச்டிஎப்சி நிறுவனப் பங்குகள் 3.6% உயர்ந்து ரூ.2,363 ஆகவும், மஹிந்த்ரா& மஹிந்த்ரா பங்குகள் 2.6% சரிந்து ரூ.564 ஆகவும், டி.எல்.எஃப். பங்குகள் 2.3% உயர்ந்து ரூ.495 ஆகவும், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2% உயர்ந்து ரூ.434 ஆகவும் இருந்தன.

எனினும் டாடா பவர் நிறுவனப் பங்குகள் 3% சரிந்து ரூ.1,021 ஆகவும், ரான்பாக்ஸி பங்குகள் 2% சரிந்து ரூ.512 ஆகவும், பாரத மிகுமின் நிறுவனம் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் 1.5% சரிந்து முறையே ரூ.1,689 மற்றும் ரூ.586 ஆகவும் விலை குறைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்