மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
பங்குச் சந்தை நேற்றைய அதிர்ச்சியில் இருந்து சிறிது மீண்டது. இந்திய பங்குச் சந்தைமட்டுமல்லாது, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் உயர்ந்தது.
அமெரிக்க பொருளாதார நெருக்கடி தொடரும் என்று அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் நேற்று கூறியிருந்தார். இதனால் முன்பேர சந்தையில் ஆகஸ்ட் மாத கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய்க்கு 10 டாலர் குறைந்தது. இதன் விலை 146 டாலரில் இருந்து 136 டாலராக குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது ஆறுதல் அளித்தாலும், இதே நிலை நீடிக்காது என்ற அச்சமும் உள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு அளவுக்கு மேல் அதிகரிப்பது, இதனை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பாதிக்கும் என ஓபெக் கருத்து தெரிவித்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 12,762.80 ஆகவும், நிஃப்டி 40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3900.75 ஆக இருந்தது.
நுகர்வோர் பொருட்கள், உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்ளின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.15 மணி நிலவரப்படி 956 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 457 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 33 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
பங்குகளின் விலைகள் நேற்று அதிக அளவு குறைந்ததால், இன்று முதலீடு செய்வதில் எல்லா தரப்பினரும் ஆர்வம் காண்பிப்பார்கள். இதனால் இன்று பங்குச் சந்தைக்கு அதிக அளவு பாதிப்பு இருக்காது என்றே தெரிகிறது. அதே நேரத்தில் நிலைமை மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 202.25 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 12,878.44 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 34.75 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3895.85 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 35.10, சுமால் கேப் 50.57, பி.எஸ்.இ. 500- 55.46 புள்ளி அதிகரித்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,298.93 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,001.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.702.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,018.74 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.735.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.283.40 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,053.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63,215.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 128.50 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 92.65, எஸ்.அண்ட்.பி 500 -13.39 புள்ளி குறைந்தது. நாஸ்டாக் 2.84 புள்ளி அதிகரித்தது.
இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 0.07, ஜப்பானின் நிக்கி 15.24, ஹாங்காங்கின் ஹாங்சாங் 153.82, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 9.84 புள்ளி அதிகரித்து இருந்தது. சீனாவின் சாங்காய் காம்போசிட் 66.38 புள்ளி குறைந்தது. மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது.